Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வழக்கறிஞர் பாலு பொய் கூறுகிறார் சதி திட்டம் தீட்டி ராமதாசிடம் கட்சியை அபகரிக்க முயற்சி: பாமக எம்எல்ஏ அருள் குற்றச்சாட்டு

சேலம்: ராமதாசிடமிருந்து கட்சியை பறிக்கும் நோக்கத்தோடு, சதி திட்டம் தீட்டி செயல்பட்டு வருகின்றனர் என பாமக துணை பொதுச்செயலாளர் அருள் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார். பாமக துணை பொதுச்செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அருள், சேலத்தில் நேற்று அளித்த பேட்டி: பாமக யாருக்கு சொந்தம் என்பது குறித்து, வழக்கறிஞர் பாலு முழுக்க, முழுக்க பொய்யான தகவல்களை, இட்டுக்கட்டி கூறி வருகிறார். ராமதாசிடமிருந்து கட்சியை பறிக்கும் நோக்கத்தோடு, பொய்யான தகவல்களை கூறி கட்சியையும், வன்னிய மக்களையும் பிரித்துவிடலாம் என்று, ஒரு குழு கடுமையான முயற்சிகளை செய்து வருகிறது. பாமக பதிவு செய்யப்பட்ட கட்சி. சிலர் தலையீட்டினால் நாங்கள் அங்கீகாரத்தை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டோம்.

பாமக தலைவராக அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே 28ம் தேதியோடு முடிந்தது. அதற்கு முன்பே அன்புமணியை கடந்த ஏப்ரல் 14ம் தேதி செயல்தலைவராக ராமதாஸ் மாற்றினார். மேலும், கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகிய இருவரையும் பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்கினார். அதன் பின்னர், ராமதாசின் முடிவுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி, அன்புமணி மகாபலிபுரத்தில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி, பொய்யாக தீர்மானம் நிறைவேற்றி, அதை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி உள்ளார். பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டோம். அவர் செயல் தலைவர் தான்.

வடிவேல் ராவணன் பாமகவின் பொதுச்செயலாளர் இல்லை என்று கூறி, தேர்தல் ஆணையத்திற்கு, ஜூன் 30ம் தேதியே ஒரு கடிதம் அனுப்பினார். எங்கள் கட்சியின் முகவரி 63, நாட்டுமுத்து நாயக்கன் தெரு, தைலாபுரம் தோட்டம், திண்டிவனம். ஆனால், கட்சியின் நிறுவனரான ராமதாசுக்கு தெரியாமல், கட்சியை அபகரிக்கும் திட்டத்தோடு, 2 ஆண்டுகளுக்கு முன்பே, 13-திலக் தெரு, சென்னை என்று முகவரியை மாற்றியுள்ளது. அதனால், தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம் அவர்களது முகவரிக்கு சென்றுள்ளது. பாமக தொடங்கியதில் இருந்து 63, நாட்டுமுத்து நாயக்கன் தெரு என்று தான் முகவரி உள்ளது.

இரண்டு ஆண்டுக்கு முன்பு தான் 13, திலக் தெரு என்று முகவரி மாற்றியுள்ளனர். நாங்கள் அதை மாற்றி தைலாபுரம் தோட்டம் என்று கொடுத்துள்ளோம். இனிமேல் கடிதம் எங்கள் முகவரிக்கு வரும். தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், எந்த இடத்திலும் பாமக தலைவர் அன்புமணி என குறிப்பிடப்படவில்லை. அந்த கூடாரம் கூறியுள்ள 41வது பொய் இது. கட்சி கொடிக்கான அதிகாரமும், உரிமையும் ராமதாசுக்கு மட்டுமே உள்ளது. வேறு யாருக்கும் உரிமையில்லை.

அவர்கள் செய்த சதித்திட்டம் குறித்து, நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் அப்பீல் செய்துள்ளோம். அதில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது குறித்து, சட்ட வல்லுநர்களிடம் ராமதாஸ் கலந்து பேசி, கூடிய விரைவில் அறிவிப்பார். 2026 தேர்தலில் ராமதாஸ் அமைக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும். ராமதாஸ் யாருக்கு ஓட்டு போட கூறுகிறாரோ, அவர்களுக்கு தான் வன்னிய மக்கள், பாமகவினர் நூறு சதவீதம் வாக்களிப்பார்கள். இவ்வாறு அருள் கூறினார்.