Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வழக்கறிஞர் டூ விவசாயி... 3 ஏக்கரில் இயற்கை வெள்ளாமை!

சினிமா பிரபலங்கள், ஐடி ஊழியர்கள், அரசுப்பணியில் இருப்பவர்கள் என அனைவரும் விவசாயம் பக்கம் திரும்பும் காலமிது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் கரிகலவாக்கத்தில், வானவில் இயற்கை வேளாண் பண்ணை என்ற பெயரில் மூன்று ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார் வழக்கறிஞர் வேங்கடபிரசாத். முதல் தலைமுறை பட்டதாரி என்பதைப்போல முதல் தலைமுறை விவசாயி ஆகியிருக்கும் வேங்கடபிரசாத்தை அவரது பண்ணையில் சந்தித்தோம்.``எங்கள் குடும்பத்தில் அனைவருமே அரசு ஊழியர்கள். ஆசிரியர், இரயில்வே பணி என ஒவ்வொருவரும் படித்த படிப்புக்கு வேலை செய்கிறார்கள். நானும் கூட சென்னையில் பள்ளிப்படிப்பு, வழக்கறிஞருக்கான படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞராக பணிபுரிந்தேன். அதுபோக, எனக்கு சமூகப்பணி செய்வதில் அதிக விருப்பம்.

அதனால் முதியோர் இல்லம் ஒன்றை என் செலவில் நடத்தி வந்தேன். இலவசமாக ஆங்கில வழிப் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தேன். இரண்டுமே, பொருளாதார சிக்கல் காரணமாக கைவிட்டுப்போனது. இதற்கிடையில், எனக்கு விவசாயம் செய்வதிலும், உணவுப் பொருட்களை இயற்கை வழியில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. தக்க சமயம் வரும்போது விவசாயம் செய்யலாமென காத்திருக்கும்போதுதான், திருவள்ளூரில் என் வக்கீல் நண்பர் ஒருவர் 2 ஏக்கரில் நிலம் வாங்கினார். வாங்கிய கையோடு என்னிடம் அந்த நிலத்தைக் கொடுத்து, இதில் உனக்கு பிடித்த விவசாயத்தை தொடங்கு எனச் சொன்னார். அந்த இரண்டு ஏக்கரோடு சேர்த்து, அருகில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மொத்தம் மூன்று ஏக்கரில் இயற்கை விவசாயத்தை தொடங்கியிருக்கிறேன்’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.

``விவசாயம் செய்ய வேண்டுமென ஆர்வம் இருந்தது. ஆனால், அதனை எப்படிச் செய்ய வேண்டுமென்ற அனுபவம் என்னிடமில்லை. அதனால், எனக்குத் தெரிந்த விவசாய நண்பரின் உதவியோடும், அவரிடம் ஒரு மாதம் விவசாயம் சார்ந்த வகுப்பில் கலந்துகொண்டும், சிறிது சிறிதாக விவசாயம் சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். அதேசமயம், விவசாயத்தில் கீரை சாகுபடி செய்வது எளிது என்பதால், முதலில் கீரை சாகுபடியை தொடங்கினேன்.30 சென்டில் 18 வகையான கீரைகளை சாகுபடி செய்தேன். அதில், 10 வகையான கீரைகள் எனது நிலத்தில் விளைந்தன. பாலக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, பசலைக்கீரை, அகத்தி போன்ற இன்னும் சில வகையான கீரைகளை வாரம் ஒருமுறை அறுவடை செய்து திருவள்ளூர் இயற்கை வேளாண் சந்தையில் விற்பனை செய்துவருகிறேன்.

கீரையை முதல்முறை சாகுபடி செய்து வருவதால் சிறிய அளவில் பயிரிட்டிருக்கிறேன். ஒரு கட்டு கீரை ரூ.15 என்ற வகையில், வாரம் 200 கீரை கட்டுகளை ரூ.3000க்கு விற்பனை செய்து வருகிறேன். நேரடியாக கீரையை விற்பனை செய்யும்போது ரூ.20க்கும் விற்பனை செய்வேன். அதுபோக, தற்போது காய்கறிப் பயிர்களையும் சாகுபடி செய்திருக்கிறேன். கத்தரி, வெண்டை, முள்ளங்கி, காராமணி, தக்காளி என 10க்கும் மேற்பட்ட காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறேன். ஒவ்வொரு பயிரையும் 15 சென்ட் என்ற கணக்கில் ஒன்றரை ஏக்கரில் விதைத்திருக்கிறேன். தற்போது, வெண்டை விளைச்சல் தரத் தொடங்கியிருக்கிறது. கூடிய விரைவில் அனைத்து காய்கறிகளும் அறுவடைக்கு தயாராகி தினசரி விற்பனைக்குச் சென்றுவிடும்.

இந்த நிலத்தை வாங்கும்போது நிலம் முழுக்க முள் மரங்களும், இரண்டு மீன் குட்டைகளும் இருந்தன. குட்டைகளை மண்கொண்டு மூடிவிட்டு நிலத்தை சமன் செய்தேன். அதேபோல, இந்த மண்ணை இந்தப் பகுதியில் செங்காட்டு மண், விவசாயத்திற்கு ஏற்ற மண் என்றார்கள். அதனால் இந்த மண்ணை இயற்கை விவசாயத்திற்கு உகந்த மண்ணாக மாற்றலாம் என்று நினைத்துதான் விவசாயத்தைத் தொடங்கினேன்.அதனால், மண்ணை சமன் செய்த பின்பு பல டிப்பர் தொழுஉரம் கொண்டுவந்து மண்ணில் கொட்டி, இரண்டு முறை நிலத்தை நன்றாக உழுதேன். தொழுஉரம் மண்ணின் கீழும் மேலுமாக சென்று வளமான நிலமாக மாறியது. பின், ஒவ்வொரு பயிரும் பயிரிடுவதற்கு முன்பு மண்புழு உரமிடுவேன். பின் வாரம் ஒருமுறை பஞ்சகவ்யம், மீன் அமிலமென கொடுத்து வருகிறேன். விவசாயத்திற்கு தேவையான நீரை போர்வெல் மூலமாக பயன்படுத்துகிறேன்.

கடந்த 6 மாதங்களாகதான் இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். நிலமும் நீரும் தயாராக இருப்பதால், இனி விவசாயம் செய்வதற்கு எனது உழைப்புதான் வேண்டும் என்ற நிலைமை இருக்கிறது. எனது பண்ணை இருக்கும் கிராமத்தில் விவசாயப் பணி செய்வதற்கு ஆட்கள் இருப்பதால் இனி அந்தக் கவலையும் இல்லை. இனிவரும் நாட்களில் நெல், கரும்பு உள்ளிட்ட பல பயிர்களை சாகுபடி செய்யப் போகிறேன். இந்த விவசாயம் எனக்கு மனநிறைவைத் தருவதால், வழக்கறிஞர் வேலைக்குச் செல்ல மனமில்லை. நஞ்சு கலக்காத நல்ல உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து மக்களுக்கு கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் மட்டும்தான் இருக்கிறது’’ என மகிழ்ச்சியோடு பேசி முடித்தார் வேங்கடபிரசாத்.

தொடர்புக்கு:

வேங்கடபிரசாத்: 94449 63962

இந்த வேளாண் பண்ணையில், அரை ஏக்கருக்கும் அதிகமான பகுதியில் பீமா ரக மூங்கிலை பயிரிட்டிருக்கிறார் வேங்கடபிரசாத். இந்த மூங்கிலைப் பற்றி கேட்கையில், இது அதிகமாக கார்பன் டை ஆக்ஸைடை உள்வாங்கி அதிகமான ஆக்சிஜனை வெளியிடுகிறது என்கிறார். இதன்மூலம், சுற்றுச்சூழல் மாசுபாடு குறைகிறது. மேலும், இந்த மூங்கிலை 3 ஆண்டுகளில் அறுவடை செய்யலாமென்றும், வெட்டப்பட்ட மூங்கிலில் இருந்து பக்க கிளைகளாக வளரும் மூங்கிலை அடுத்த 40 ஆண்டுகளுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம் என்றும் கூறினார்.

பயிர்களுக்கு தீங்கு செய்யும் பார்த்தீனியம்!

திருவள்ளூர் மாவட்டம் திரூர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் சிற்றம்பாக்கம் மற்றும் கனகமாசத்திரம் கிராமங்களில் பார்த்தீனியத்தின் பாதிப்புகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள் முனைவர் குமரேசன், முனைவர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பார்த்தீனியத்தால் ஏற்படும் தீங்குகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி எடுத்துரைத்தனர். பார்த்தீனியம் தீங்கு விளைவிக்கும் ஒருவகை தாவர களைச்செடியாகும். வெளிநாட்டிலிருந்து விதைகள் மூலம் இந்தியாவுக்கு பரவிய இந்தக் களைச்செடியானது மனிதர்களுக்கு தோல் அழற்சி, ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற கடுமையான சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தும். பல்லுயிர் பெருக்கத்திற்கும் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. இது கால்நடைகளுக்கும் சுவாசக் கோளாறுகள் மற்றும் ஒவ்வாமை பிரச்சனைகளை உருவாக்குகின்றன. இந்த வகை களைச் செடிகள் மிகவும் வேகமாக பெருகி வருகின்றன. ஒரு செடியானது குறைந்தது 25 ஆயிரம் முதல் 40000 ஆயிரம் வரை விதைகளை உருவாக்கும். இதை வேருடன் பிடுங்கி அப்புறப்படுத்துதல், உப்புக்கரைசல் தெளித்தல் மற்றும் களைக்கொல்லியான கிளைபோசிட் 1.5 சதவீதம் அளவுக்கு தெளிப்பான் கொண்டு தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என முகாமில் செயல் விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட்டது.