வழக்கு விசாரணையில் வெடித்த சிரிப்பலை: சுப்ரீம் கோர்ட்டில் ‘விஸ்கி’ பாட்டிலுடன் ஆஜரான வக்கீல்; இது என்ன ஜூஸ் பாக்கெட்டா..? என நீதிபதி கேள்வி
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வர்த்தக முத்திரை தொடர்பான வழக்கில், ஆதாரமாக விஸ்கி பாட்டில்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் விசாரணை கலகலப்பாக மாறியது. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் அவரது சக நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு, இரண்டு விஸ்கி பிராண்டுகளுக்கு இடையேயான வர்த்தக முத்திரை தொடர்பான வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்களான முகுல் ரோத்தகி மற்றும் ஹரிஷ் சால்வே ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது, வழக்கின் முக்கிய ஆதாரமாக, சர்ச்சைக்குரிய இரண்டு நிறுவனங்களின் விஸ்கி பாட்டில்களையும், டெட்ரா பேக்குகளையும் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்தப் பாட்டில்களைப் பார்த்த நீதிபதி சூர்யா காந்த், உடனடியாக நகைச்சுவையாக, ‘வெளியே இருக்கும் லேபிள்கள் ஒரே மாதிரியாக இருப்பதைப்போல், உள்ளே இருக்கும் சரக்கும் ஒரே மாதிரியாக இருக்காது என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, சிறிய டெட்ரா பேக்குகளை ரோத்தகி காண்பித்தபோது, அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த நீதிபதி, ‘இது என்ன ஜூஸ் பாக்கெட் போல உள்ளதே! இதை மாணவர்கள் பள்ளிக்குக் கூட எளிதாக எடுத்துச் சென்று விடுவார்கள்’ என்று கிண்டலடித்தார்.
இறுதியாக, மற்றொரு மூத்த வழக்கறிஞரான ஹரிஷ் சால்வேவைப் பார்த்து, ‘உங்கள் நேரத்தைப் பற்றி எங்களுக்குக் கவலை ஏற்படுகிறது’ என்று கூறி, இந்த விஸ்கி பாட்டில்களைப் பார்க்கும் நேரம் இதுவல்ல என்பதுபோலவும் அவர் ஜாடைமாடையாகக் குறிப்பிட்டபோது, நீதிமன்ற அறை முழுவதும் சிரிப்பலையால் அதிர்ந்தது.மிக முக்கிய வாதங்கள் நடைபெறும் உச்ச நீதிமன்றத்தில் நடந்த இந்த நகைச்சுவையான சம்பவம், வழக்கின் இறுக்கமான சூழலை தளர்த்தி அனைவரையும் சிரிக்க வைத்தது.


