சட்டக்கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; 4 குற்றவாளிகளுக்கு எதிராக 658 பக்க குற்றப்பத்திரிக்கை: கொல்கத்தா நீதிமன்றத்தில் தாக்கல்
கொல்கத்தா: கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், பிரதான குற்றவாளி கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தற்போது நான்கு பேர் மீது காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் பயின்ற 24 வயது மாணவி, கடந்த ஜூன் 25ம் தேதி இரவு கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாவலர் அறையில் வைத்து கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கொடூரமான குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், கல்லூரியின் தற்காலிக ஊழியரும், திரிணாமுல் மாணவர் அமைப்பின் முன்னாள் நிர்வாகியுமான மனோஜித் மிஸ்ரா (31), மாணவர்கள் பிரமித் முகோபாத்யாய் மற்றும் ஜைப் அகமது ஆகியோரை காவல்துறை கைது செய்தது. மேலும், பாதுகாவலர் பினாகி பானர்ஜி (51) தனது வாக்குமூலத்தில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்ததால் அவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பிரதான குற்றவாளி கைது செய்யப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் ஆன நிலையில், இந்த வழக்கில் தற்போது நான்கு பேர் மீதும் அலிப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காவல்துறை தனது முதல் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
658 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கையில், 170 பக்க முக்கிய ஆதாரங்கள், 80 சாட்சிகளின் வாக்குமூலங்கள், டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் மற்றும் தடயவியல் அறிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இதில், முக்கிய குற்றவாளியான மனோஜித் மிஸ்ராவின் டிஎன்ஏ மாதிரிகள், சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் முழுமையாகப் பொருந்திப் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்குக் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது.