ஒட்டாவா: இந்தியாவை சேர்ந்த லாரன்ஸ் பிஸ்னோய் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். தற்போது குஜராத் மாநிலம் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2022ல் பஞ்சாபி பாடகர் சித்து மூஸேவாலா படுகொலை,மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கி கொலை, பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கிசூடு சம்பவங்களுக்கு பிஸ்னோயின் கும்பலை சேர்ந்த ரவுடிகள் தான் காரணம் என்று போலீசார் கூறினர். இந்த கும்பலை சேர்ந்தவர்கள் பலர் கனடாவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், பிஸ்னோய் கும்பலை தீவிரவாதிகள் பட்டியலில் கனடா சேர்த்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டின் பொது பாதுகாப்பு துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி கூறுகையில், கனடாவில் உள்ள ஒவ்வொரு நபர்களுக்கும் தங்கள் வீட்டினுள்ளும் சமூகத்திலும் பாதுகாப்பாக உணர உரிமை உண்டு. மேலும் அவர்களை பாதுகாப்பது நமது அடிப்படை பொறுப்பாகும். பிஷ்னோய் கும்பலால் குறிப்பிட்ட சமூகங்கள் தீவிரவாதம், வன்முறை மற்றும் மிரட்டலுக்கு இலக்காகியுள்ளன என்றார். லாரன்ஸ் பிஸ்னோய் இந்தியாவில் இருந்தாலும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் பலர் கனடாவில் உள்ளனர்.