Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பிரபல நிழலுலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் குழுவை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது கனடா அரசு

ஒட்டாவா: பிரபல நிழலுலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் குழுவை தீவிரவாத இயக்கமாக கனடா அரசு அறிவித்தது. இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி காலிஸ்தான் உள்ளிட்ட சில பிரிவினைவாத அமைப்புகள் வெளிநாடுகளில் இயங்கி வருகின்றன. இதுபோன்ற காலிஸ்தான் தலைவர்களில் முக்கியமானவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இந்தியாவில் பல்வேறு நாச வேலைகளில் தொடர்புடைய இவர் கனடா நாட்டு குடியுரிமை பெற்று அங்கு வசித்து வந்தார். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார்.

இந்திய ஏஜென்ட்கள் மூலம் கொலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறினார். இதை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இதன் காரணமாக, இந்தியா, கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது. எனினும், பிரதமர் பதவியில் இருந்து ட்ரூடோ நீக்கப்பட்டு,மார்க் கார்னி நியமிக்கப்பட்டதிலிருந்து, இந்தியா - கனடா உறவுகள் மெதுவாக மீண்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியா உள்பட சர்வதேச அளவில் கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக கனடா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்மூலம், கனடாவில் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய அல்லது சொந்தமான எந்தவொரு சொத்துகளையும் முடக்கவோ பறிமுதல் செய்யவோ அந்நாட்டு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. அந்நாட்டு சட்டத்தின்படி, பட்டியலிடப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு தெரிந்தே சொத்து அல்லது நிதியுதவி வழங்குவது அல்லது அதன் சொத்துகளைக் கையாள்வது என்பது குற்றமாகும். வன்முறை செயல்கள், தீவிரவாதத்துக்கு கனடாவில் இடமில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.