புதுடெல்லி: பாஜவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கும் குற்றச்சாட்டு நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரவும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசித்துள்ளன. இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்குவது மற்றும் அவருக்கான சட்ட பாதுகாப்பு குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது.
தலைமை தேர்தல் ஆணையருக்கு சட்ட பாதுகாப்பு வழங்க ஒன்றிய பாஜ அரசு கடந்த 2023ல் சட்டம் கொண்டு வந்தது. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம் 2023ல் உள்ள பிரிவு 16ன்படி, பதவியில் இருக்கும் போது எடுக்கப்பட்ட முடிவுகளுக்காக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மற்ற தேர்தல் ஆணையர்களுக்கு எதிராக எந்தவொரு நீதிமன்றமும் எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கையையும் எடுக்கவோ அல்லது தொடரவோ முடியாது.
இச்சட்டத்தின் பிரிவு 11(1)ன் படி, தலைமை தேர்தல் ஆணையர் எந்த நேரத்திலும், ஜனாதிபதியிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து பதவி விலகலாம். பிரிவு 11(2)ன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்குவதற்குத் தேவையான அதே முறையிலும் அதே காரணங்களுக்காகவும் தவிர, தலைமைத் தேர்தல் ஆணையரை அவரது பதவியில் இருந்து நீக்க முடியாது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நிறைவேற்றும் தீர்மானத்தின் மூலம் மட்டுமே தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய முடியும். தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்காத வரையிலும் மற்ற தேர்தல் ஆணையர்களை பதவியில் இருந்து நீக்க முடியாது என்று சட்டம் கூறுகிறது.