Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

3 புதிய சட்டங்களை எதிர்த்து வழக்கு; நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க வேண்டாம்: உயர்நீதிமன்றம் கண்டிப்பு

சென்னை: நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டத்துக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்‌ஷ்ய அதினியம் என்ற பெயர்களுடன் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு 2024ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்த சட்டங்களை அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவித்து அவற்றை ரத்து செய்யக்கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில், 3 சட்டங்களை நிறைவேற்றும்போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் போதுமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லாத நிலையில், அவசர கதியில் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என வாதிடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், முறையான கலந்தாலோசனை நடத்தவில்லை. தங்கள் கருத்துகள் பரிசீலிக்கப்படவில்லை. போதுமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லை என்ற காரணங்களை கூறி எப்படி இந்த சட்டங்களை எதிர்த்து வழக்கு தொடர முடியும்.

இந்த காரணங்களை கூறி சட்டம் இயற்றும் தகுதியை எதிர்க்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், இது சம்பந்தமான தீர்ப்புகள் ஏதாவது இருந்தால் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தனர்.

அப்போது, திமுக தரப்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வேண்டுமானால் தனி மனுவாக தாக்கல் செய்யலாம். இந்த வழக்கில் இடையீட்டு மனுவை ஏற்க முடியாது. இந்த நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்து, விசாரணையை நவம்பர் 3வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.