இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு பெண்ணும் தற்காப்பு கலைகள் கற்றுக்கொள்வது என்பது அவசியமான ஒன்று. அந்த தற்காப்பு கலை அத்தியாவசிமாக மட்டுமின்றி பெரும் ஆர்வமாக இருந்து விட்டால் அதில் பல்வேறு சாதனைகளை படைக்கலாம் என்கிறார் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த பதினேழு வயதேயான மோன்யா ராவ். இந்த இளம் திறமையாளர் கராத்தே மட்டுமின்றி பேச்சுப்போட்டி, க்விஸ் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியம், யோகா என பன்முகத் திறமைகளைக் கொண்டு அசத்தி வருகிறார். மோன்யா வின் அத்தனை திறமைக்கும் வாய்ப்பு க்கும் அவரது தாயார் உறுதுணையாகவும் ஊன்றுகோலாகவும் இருந்து வழிகாட்டி வருகிறார். தற்போது சட்டம் பயின்று பல்வேறு ஏழை எளியோருக்கு நிறைய உதவி செய்ய வேண்டும் என்கிற உயரிய நோக்கில் சட்டக்கல்லூரியில் அடியெடுத்து வைக்கிறார் இந்த இளம் சாதனை மாணவி. தமிழ் , ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என நான்கு மொழிகளை சரளமாக பேசுகிறார். இவர் தனது சட்டப் படிப்பு குறித்தும் கராத்தேயில் பல்வேறு சாதனைகள் படைப்பது குறித்தும், தனது இதர திறமைகள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்..
கராத்தேயில் ஆர்வம் ஏற்பட்டது எப்போது?
நான் 10 வயதிலிருந்து கராத்தே கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். முதலில் எனது பள்ளியில் தான் கராத்தே கற்றுக் கொண்டேன். அதன் பிறகு எனது அம்மா என்னை கராத்தே கற்றுக் கொள்ள தனி பயிற்சி வகுப்பில் சேர்த்தார். அதன் பிறகு அதில் எனக்கு நல்ல ஆர்வம் ஏற்பட்டது. அதனைக் கண்டு எனது மாஸ்டரும் எனது அம்மாவும் என்னை பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவித்தனர். அதிலிருந்து நான் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கு கொண்டு பல பரிசுகளை வாங்க துவங்கினேன். தற்போது கராத்தேவில் இரண்டாவது டான் என்னும் பிளாக் பெல்ட் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எதிர்காலத்தில் நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களையும் பரிசுகளையும் வாங்க வேண்டும் என்பது எனது லட்சியம். இதுவரை மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் வெள்ளி பதக்கங்களையும் பல்வேறு கோப்பைகளையும் வென்று சாதனை படைத்துள்ளேன். இனி இன்டர்நேஷனல் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பது எனது எதிர்கால திட்டங்கள். அதற்கான பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். சமீபத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 17 -20 வயதுக்கோருக்கான பிரிவில் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கங்கள் வென்றேன். இதற்கெல்லாம் எனது மாஸ்டர்கள் ராஜாமணி, அருண் மற்றும் உமா மகேஸ்வரி அவர்களுக்கு எனது பெரும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் தான் நான் கராத்தே விளையாட்டில் சாதிக்க பல்வேறு பயிற்சிகளை கற்றுக் கொடுத்தனர்.
சட்டப் படிப்பு குறித்து...
எனக்கு சிறுவயதிலிருந்தே சட்டம் படிப்பது குறித்து அதீத ஆர்வம் இருந்தது. தற்போது தனியார் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்து இருக்கிறேன். எனக்கு வழக்கறிஞராகி ஏழை எளியவர்களுக்கு , முதியோர்களுக்கு மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்குவதோடு தேவையான சட்ட உதவிகளையும் செய்ய வேண்டும் என்கிற எண்ணங்கள் இருக்கிறது. அதேபோன்று எனது உறவினர் பெண் ஒருவர் சட்டம் பயின்று தற்போது சிறுவயதிலேயே நீதிபதியாக இருக்கிறார். அவர் தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஸன். அவரை போலவே சட்டப் படிப்பு முடித்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி நீதிபதியாக வேண்டும் என்பது எனது பெருங் கனவுகளில் ஒன்று.
மேடை பேச்சு அனுபவங்கள் குறித்து..
சிறுவயதிலிருந்தே நிறைய மேடைகளில் பேசுவது எனக்கு பிடித்தமான ஒன்று. தற்போது விருது பெறும் விழாக்களில் பேசி வருகிறேன். சில நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு எனது தன்னம்பிக்கை உரையாற்றியும் வருகிறேன். என்னை போல விளையாட்டுத் துறையிலோ வேறு ஏதேனும் துறைகளிலோ ஈடுபடுபவர்களுக்கு தேவையான மோடிவேஷனல் ஸ்பீச் அளித்து வருகிறேன். சமீபத்தில் ஒரு விழாவில் கௌரவ அழைப்பாளராக கலந்து கொண்டு சாதனை செய்த சிறுவர் சிறுமிகளுக்கு பரிசு அளித்து மகிழ்ந்தேன். பாரஸ்ட் டிபார்ட்மென்ட் நடத்திய மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு தமிழக அமைச்சர் பொன்முடி அவர்களிடம் முதல் பரிசு பெற்றேன். அதில் காட்டு விலங்குகள் பாதுகாப்பு குறித்து உரையாற்றியிருந்தது ஒரு இனிய அனுபவமாக இருந்தது.
உங்களுக்கு கிடைத்த பரிசுகள் மற்றும் பாராட்டுகள்..
இதுவரை மாநில தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு 18 தங்கம் , 15 வெள்ளி பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளேன். அதே போன்று எனது பன்முக திறமைக்காக 250 க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளேன். Martial arts of Prodigy awards, சிறந்த தன்னம்பிக்கை நாயகி விருது, அன்புத்தமிழச்சி விருது, சிறந்த பேச்சாளர் விருது, best dream women award உட்பட பல்வேறு விருதுகள் கிடைத்தது மகிழ்வான ஒன்று. நான் எனது கல்வியிலும் பல்வேறு கலைகளிலும் சிறந்து விளங்க எனது அம்மா அப்பா, பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியரும், தாத்தா மற்றும் பாட்டி, எனது விளையாட்டுத் துறை மாஸ்டர்களும், மிகுந்த உந்துதலாக இருந்து வருகிறார்கள். நான் சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகளில் வென்று எனது மாஸ்டர்களுக்கும் பெற்றவர்களுக்கும் , நமது நாட்டிற்கும் பெருமை தேடி தரவேண்டும் என்கிற ஆசைகள் இருக்கிறது. அதற்கான எனது பயிற்சிகளும் திட்டமிடலுமாகவே எனது பயணம் தொடர்ந்து வருகிறது. எனது எல்லா செயல்களிலும் எனது கூடவே அம்மா உறுதுணையாக வருகிறார். வருங்காலத்தில் எனது சட்டக் கல்வியிலும் , விளையாட்டுத் துறையிலும் நிறைய வெற்றிகளை குவிக்க வேண்டும். இனி அதை நோக்கியே எனது வெற்றி கரமான வாழ்வியல் பயணம் இருக்கும். என்னை போல விளையாட்டு துறையில் சாதிக்கத் துடிக்கும் சிறுவர் சிறுமியர் மொபைல் பயன்பாடுகளை குறைத்துக்கொண்டு, ஏதேனும் ஒரு கலைகளையோ, விளையாட்டு துறையையோ தேர்ந்தெடுத்து முறையான பயிற்சி செய்தால் வெற்றி நமது வாசலை தேடி வரும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என தன்னம்பிக்கை மிளிர பேசுகிறார் இந்த இளம் சாதனை பெண் மோன்யா ராவ்!!
- தனுஜா ஜெயராமன்
மூலிகை காபி
பெண்களுக்கு இரும்புச் சத்து மிகவும் அவசியம். இதற்கு சித்தர்கள் ஓர் இயற்கை மூலிகை காபியை கூறியுள்ளார்கள். இந்தக் காபியை தயாரிப்பது மிகவும் சுலபம். சுக்கு, திப்பிலி, அதிமதுரம், வல்லாரை இலை எல்லாவற்றையும் சம பங்கு எடுத்துக் காய வைத்து, லேசாக வறுத்து, இடித்து பொடியாக்கி காபித் தூளாகப் பயன்படுத்தலாம். எப்போதுமான பால் காபி, தேநீருக்கு பதில் இது குடிக்க ஆரோக்கியம் பெறலாம். இந்தக் காபி இனிப்புக்கு பனைவெல்லம், நாட்டுச் சர்க்கரை பயன்படுத்தலாம். இந்த இயற்கை காபி சாப்பிடுவதால் பெண்களுக்கு இரும்புச் சத்து கிடைப்பதுடன், இரத்தம் சுத்தமடையவும் உதவுகிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல பலன் கொடுக்கும். வல்லாரை மூளைச் சுறுசுறுப்பு, நினைவாற்றலை மேம்படும் மன அழுத்தம், கவலை, தூக்கமின்மை குறையும் உடல் அழற்சி குறைக்கும், காயம் ஆற உதவும் நரம்பு வலி, சோர்வு, மூளை மற்றும் நரம்பு தளர்ச்சியைக் குறைக்கும்.
- முக்கிமலை நஞ்சன்