கர்ப்பிணியை கீழே தள்ளியவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு..!!
திருப்பத்தூர்: திருப்பதி ரயிலில் பலாத்கார முயற்சியில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் ஹேமராஜுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவும் திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. ரயில்வே சார்பில் ரூ.50 லட்சமும், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 லட்சமும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். ஆந்திராவைச் சேர்ந்த கர்ப்பிணி, கோவையில் இருந்து திருப்பதி இண்டர்சிட்டி ரயிலில் சென்றுள்ளார். ரயிலில் கழிவறைக்குச் சென்றபோது வழிமறித்த ஹேமராஜு என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு தொடரப்பட்டது. ஹேமராஜுவின் செயலால் கர்ப்பிணி கூச்சலிட்டதால் உடனே அவரை ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். கர்ப்பிணிக்கு கை, கால் முறிவு; தலையில் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.