புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிரதமர் மோடி அவரை தனது சமூக வலைதளத்தில் நினைவுகூர்ந்தார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில்,‘‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நீண்ட கால பொதுவாழ்வில் அவர் நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை நாம் நினைவு கூர்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாட்டை கட்டியெழுப்புவதில் மன்மோகன் சிங் பங்களிப்பை நினைவுகூர்ந்தார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, ‘‘நாட்டை கட்டியெழுப்புவதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஏழைகள் மற்றும் ஒரங்கப்பட்ட மக்களுக்கான அவரது துணிச்சலான முடிவுகள் மற்றும் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அவரது வரலாற்று பங்களிப்பு ஆகியவை நம்மை தொடர்ந்து வழிநடத்தும். அவரது எளிமை, பணிவு மற்றும் நேர்மை நம் அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்ந்தனர்.