சென்னை: கடந்த மாத பயணச்சீட்டு சோதனையில் ரூ.6.25 கோடி வருவாய் ஈட்டி சென்னை கோட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கோட்டம் தனது ரயில் சேவைகளில் பாதுகாப்பான, சுமுகமான மற்றும் பயணிகளுக்கு உகந்த பயண அனுபவத்தை உறுதி செய்வதோடு, பயணச்சீட்டு சோதனை வருவாயில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் சைலேந்திர சிங் தலைமையில் கடந்த செப்.30ம் தேதி சிறப்பு பயணச்சீட்டு சோதனை நடந்தது.
அப்போது, முறையற்ற பயணம் மேற்கொண்ட 3,254 வழக்குகள் கண்டறியப்பட்டு, மொத்தமாக ரூ.18.22 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் கடந்த மாதம் மட்டும் 1,21,189 வழக்குகளிலிருந்து ரூ.6.25 கோடியை வசூலித்து, தனது மாதாந்திர பயணச்சீட்டு சோதனை வருவாயில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இது ஒரே மாதத்தில் ஈட்டப்பட்ட அதிகபட்ச வருவாய்க்கான புதிய சாதனையாகும். இதுமட்டுமின்றி, புறநகர், மெயில்/எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் சிறப்பு ரயில்களில் நடத்தப்பட்ட வழக்கமான பயணச்சீட்டு சோதனைகள், விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் முன்கூட்டிய நடவடிக்கைகள் காரணமாக, கடந்த ஆண்டை விட பயணச்சீட்டுடன் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதன்படி, அனைத்து பயணிகளும் தகுந்த பயணச்சீட்டுகள் அல்லது பாஸ்களுடன் பயணம் செய்யுமாறு சென்னை கோட்டம் கேட்டுக்கொள்கிறது.