பெங்களூரு: ஐபிஎல் 52வது லீக் போட்டியில் நேற்று, சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 18வது தொடரின் 52வது லீக் போட்டி, பெங்களூருவில் நேற்று நடந்தது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணியின் துவக்க வீரர்கள் ஜேகப் பெத்தெல், விராட் கோஹ்லி அதிரடியாக பவர்பிளேவில் 71 ரன் விளாசினர்.
பின், பதிரனா வீசிய 10வது ஓவரில், பெத்தெல் (33 பந்து, 55 ரன்) அவுட்டானார். சாம் கர்ரன் வீசிய 12வது ஓவரில் கோஹ்லி (33 பந்து, 5 சிக்சர், 5 பவுண்டரி, 62 ரன்) ஆட்டமிழந்தார். அதன் பின், படிக்கல் (17 ரன்), ஜிதேஷ் சர்மா (7 ரன்), படிதார் (11 ரன்) ஆகியோர் ஆட்டம் இழந்தனர். கலீல் அகமது வீசிய 19வது ஓவரில், ரொமாரியோ ஷெப்பர்ட் 33 ரன்களை குவித்தார். பதிரனா வீசிய கடைசி ஓவரில், ரொமாரியோ 20 ரன் விளாசியதால், பெங்களூரு அணியின் இன்னிங்ஸ், 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்னுடன் முடிவுக்கு வந்தது.
ரொமாரியோ (14 பந்து, 6 சிக்சர், 4 பவுண்டரி, 53 ரன்), டிம் டேவிட் (2 ரன்) களத்தில் இருந்தனர். சென்னையின் பதிரனா 3 விக்கெட் வீழ்த்தினார். பின், 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. துவக்க வீரர்கள் ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரசீத் அதிரடியாக ஆடினர். இவர்கள் 51 ரன் எடுத்து இருந்த போது ரசீத் அவுட்டானார். பின்னர், சாம் கர்ரன் 5 ரன்னில் வீழ்ந்தார். பின் மாத்ரே 94 ரன் குவித்து அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் சென்னை, 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்து, 2 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.