சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: பருவமழைக்கு முன்னதாகவே விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் பலமுறை எச்சரிக்கை விடுத்தோம். கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை நெல்மணிகளை கொட்டிவைத்து வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள் விவசாயிகள். அறுவடைக்கு தயாரான நெல்மணிகள், தண்ணீரில் மிதக்கின்றன. எனவே, இனியும் காலம் தாழ்த்துவதில் அர்த்தமே இல்லை.
நெல் விளைச்சல் அதிகம் என்றால் அதற்கு ஏற்ப முன்கூட்டியே கொள்முதல் தொடங்கியிருக்க வேண்டாமா..? தேவையான அளவு கிடங்குகளை தயார் செய்திருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் மழையில் நனையாமல் பாதுகாப்பதற்கு தார்ப்பாய் போன்ற அடிப்படை வசதிகளையாவது செய்து கொடுத்திருக்க வேண்டாமா?
தினமும் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும். 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை மழையில் இருந்து பாதுகாக்கத் தேவையான தார்ப்பாய்களை வழங்கிட வேண்டும் என்றும் அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.