ஜம்மு - காஷ்மீரில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கன்னியாகுமரியில் இருந்து இன்று புறப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், ரயில் சேவையை வடக்கு ரயில்வே மாற்றியமைக்க கூறியுள்ளது. அதன்படி, கன்னியாகுமரியில் இருந்து இன்று மதியம் 2.15 மணிக்கு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கட்ராவுக்கு இயக்கப்படும் வாராந்திர ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16317) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கட்ராவில் இருந்து சென்னை சென்டிரலுக்கு இன்று இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயில் (16032) ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கட்ரா - நிஜாமுதீன் இடையே ரத்து செய்யப்படுகிறது. எனவே, இந்த ரயில் நாளை (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு நிஜாமுதீனில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி புறப்படும். அதேபோல், நாளை இரவு 10.30 மணிக்கு ஸ்ரீ மாதா வைஷ்ணவ் தேவி கட்ராவில் இருந்து சென்னை சென்டிரலுக்கு இயக்கப்படும் அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயில் (16032) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.