*எம்எல்ஏ ஆய்வு
ஏற்காடு : ஏற்காடு அருகே குப்பனூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் 4,000 மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது. இதனை சித்ரா எம்எல்ஏ ஆய்வு செய்தார்.சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால், பல்வேறு இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவியது. கடும் குளிரால் உள்ளூர் மக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், குப்பனூர் மலைப்பாதையில், கொட்டச்சேடு கிராமம் அருகே நேற்று சாலை தடுப்பு மழையில் ஊறிய நிலையில் திடீரென்று சரிந்து விழுந்தது.
தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில், 4,000 மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், குப்பனூர் மலைப்பாதையில் பைக் மற்றும் உள்ளூர்வாசிகளின் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மண் சரிவு ஏற்பட்ட இடத்தில், மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு பணிகள் நடந்த வந்த போது, ஏற்காடு எம்எல்ஏ சித்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
