தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காப்பதற்காக மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டியுள்ளோம்: உறுப்பினர் சேர்க்கை 2.70 கோடியை தாண்டியது: ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா பேட்டி
சென்னை: தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காப்பதற்காக தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டியுள்ளோம். திமுக உறுப்பினர் சேர்க்கை 2.70 கோடியை தாண்டியுள்ளது என்று ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா கூறினர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா ஆகியோர் நேற்று அளித்த பேட்டி:
தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கின்ற கலாச்சாரத்தை பறிக்கின்ற, மான உணர்வுகளை சிதைக்கின்ற ஒன்றிய அரசுக்கு எதிராகவும் ஓரணியில் தமிழர்கள் திரள வேண்டும் என்பதற்காக இதுவரை இந்தியாவில் எந்த அரசியல் கட்சி தலைவரும் எடுக்காத ஒரு முயற்சியை “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று மண், மொழி, மானம் காப்பதற்காக, நம்முடைய பிரத்யேக உரிமைகளை காப்பதற்காக ஓரணியில் வரவேண்டும் என முயற்சியை முதல்வர் எடுத்தார்.
அது, ஜூலை 1ம் தேதி தொடங்கியது, திமுகவின் 7 லட்சம் தொண்டர்கள் அந்த பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லா வீடுகளிலும் குறைந்தப்பட்சம் ஒரு நபராவது சேர்க்க வேண்டும் என முடிவெடுத்து, இந்த 70 நாட்களில் அதை வெற்றிகரமாக திமுக தமிழ்நாட்டில் இருக்கிற 68,000 வாக்குச்சாவடிகளிலும் சென்று ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தோடு இந்த உறுப்பினர் சேர்க்கை நிறைவு செய்து இருக்கிறோம்.
இரண்டாவது கட்டமாக வருகிற 15ம் தேதி ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது. மூன்றாவது கட்டமாக தலைவர் மு.க.ஸ்டாலின் 17ம் தேதி நடக்கும் முப்பெரும் விழாவில் அந்த உறுதிமொழியை முழு மனத்தோடு ஒருமனதாக நிறைவேற்றுவார். அடுத்த கட்டமாக செப்டம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் திமுக சார்பில் மாவட்ட அளவில் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுதிமொழி எப்படி வாக்குச்சாவடிகளில் நிறைவேற்றினோமோ, அந்த வழிமொழிந்து தமிழ்நாடு முழுக்க தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.
அந்த கூட்டங்களில் அரசியல் கட்சிகளை தாண்டி பொதுமக்கள், வியாபாரிகள், வர்த்தகர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளும் அளவில் ஒரு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி நிறைவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு முழக்கத்தை முன்வைக்க இருக்கிறார். ‘தமிழ்நாட்டை தலைக்குனிய விட மாட்டோம்’ என்பதுதான் அந்த முழக்கம். இதை தமிழ்நாடு முழுக்க கொண்டு செல்ல ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் லட்சக்கணக்கான மக்கள் பங்குபெறும் அளவில் பொதுக்கூட்டம் நடைபெறும்.
இப்படிப்பட்ட ஒரு நிகழ்வினை இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்தது இல்லை என்ற அளவிற்கு மூன்று கட்டங்களாக, 70 நாட்களுக்கு முன்னால் தொடங்கிய இந்த இயக்கம் பல்வேறு பரிமாணங்களைக் கடந்து, நிறைவாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் முதல்வர் இதனை வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கிறார்.
ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் இதுவரை 2.70 கோடி உறுப்பினர் சேர்க்கையைத் தாண்டியுள்ளோம். தன்னுடைய இயலாமையால் ‘ஓரணியில் தமிழ்நாடு’ குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். அதிமுக பாஜவிடம் மண்டியிட்டு விட்டது. தமிழ்நாட்டையே பாஜவிடம் அடகு வைக்கத் துடிக்கின்றார்கள். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது திமுக அமைப்பு துணை செயலாளர்கள் தாயகம் கவி எம்எல்ஏ, ஆஸ்டின் ஆகியோர் உடனிருந்தனர்.