திருவொற்றியூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம், வெள்ளிவாயல் 2 வேப்பங்கொண்டா ரெட்டிபாளையம் கிராமத்தில் திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலுக்கு சொந்தமான 10.95 ஏக்கர் விவசாய நிலத்தை ராமநாத ரெட்டியார், கிருஷ்ணன் மற்றும் தசரதன் ஆகியோர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். குத்தகை காலம் கடந்த 2004ம் ஆண்டு முடிவடைந்த பிறகும் நிலத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்காமல் தொடர்ந்து அனுபவத்தில் வைத்திருந்தனர். மேலும் கோயில் நிர்வாகம், உரிமை கோராமல் இருக்க 2009ம் ஆண்டு பொன்னேரி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், ஆக்கிரமிப்புதாரர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த வழக்கில், கடந்த 2019ம் ஆண்டு 10.95 ஏக்கர் நிலம், கோயிலுக்கு சொந்தம் என்று தீர்ப்பானது. ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் சம்பந்தப்பட்ட தனியார் கோயில் நிர்வாகத்துக்கு தெரியாமல் அனுபவத்தில் வைத்திருந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் தியாகராஜ சுவாமி கோயில் உதவி கமிஷனர் நற்சோணை தலைமையில், ஆய்வாளர் அறிவுச்செல்வி, தனி வட்டாட்சியர் சத்யேந்திரராஜ் மற்றும் கோயில்பணியாளர்கள் சந்தானம், சுபா தேவி ஆகியோர் சென்று கிராம மக்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு பிடியில் இருந்த ரூ.24 கோடி மதிப்பிலான 10.95 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டனர். பின்னர் இது கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலம் என்று அறிவிப்பு பலகை வைத்தனர்.