பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா எழுமூரை சேர்ந்த தொழிலாளி அரசன் (55). அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் மனைவி லதா (30). இருவரது குடும்பத்தினருக்கும் நில பிரச்னையால் முன்விரோதம் இருந்து வந்தது. 2018ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் லதா, இவரது தந்தை ராஜேந்திரன் (57), இவரது மகன்கள் அறிவழகன் (28), கார்த்திக் (25) ஆகியோர் அரசனை கட்டையால் தாக்கினர்.
இதில் அவர் உயிரிழந்தார். மங்களமேடு போலீசார் வழக்குப்பதிந்து லதா, ராஜேந்திரன், அறிவழகன், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இறுதி விசாரணை நடந்தது. லதா, ராஜேந்திரன், அறிவழகன், கார்த்திக் ஆகிய 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி பத்மநாபன் தீர்ப்பளித்தார். இதையடுத்து லதாவை திருச்சி பெண்கள் சிறையிலும், மற்றவர்களை திருச்சி மத்திய சிறையிலும் போலீசார் அடைத்தனர்.
