நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90% நிறைவு; 75 ஆயிரம் சதுர மீட்டரில் விரிவாக்கம் செய்யப்படும் கோவை விமான நிலையம்: விமான நிலைய இயக்குநர் தகவல்
கோவை: கோவை விமான நிலைய முனைய கட்டிடம் 75 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படும் என கோவை விமான நிலைய இயக்குனர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், பூனே, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், ஷர்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கோவை விமான நிலையத்தில் விமானங்கள் இயக்கம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்த கடந்த 2010ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டது.
இதற்காக சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், காளப்பட்டி, நீலாம்பூர், இருகூர் ஆகிய கிராமங்களில் 627.89 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்பின்னர் பல்வேறு காரணங்களால் அப்பணிகள் மெதுவாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அப்பணிகள் வேகம் எடுத்துள்ளன. தமிழ்நாடு அரசு ரூ.2,088.92 கோடி நிதி ஒதுக்கி, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி 451.74 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. 20.58 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும் சேர்த்து 472.32 ஏக்கர் நிலம் எவ்வித நிபந்தனையும் இன்றி, இலவசமாக 99 ஆண்டுகள் குத்தகைக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மாவட்ட நிர்வாகம் விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்தது.
ஏற்கனவே அப்பகுதியில் இருக்கும் ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 148.39 ஏக்கர் நிலத்தில் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளலாம் என அத்துறை சார்பில் தடையின்மை சான்று வழங்கப்பட்டுள்ளது. ஒப்படைக்கப்பட்ட நிலங்களில் மாநில அரசுடன் இணைந்து விமான நிலைய ஆணையம் அளவீடு செய்யும் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கோவை விமான நிலைய பொறுப்பு இயக்குநர் சம்பத்குமார் கூறியதாவது:
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 627 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், தற்போது 605 ஏக்கர் நிலம் விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை சர்வே செய்யும் பணிகள் கடந்த ஜனவரியில் இருந்து நடந்து வந்தது. ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் மற்றும் குழப்பங்கள் இருந்ததால், மாநில அரசுடன் இணைந்து நில அளவீடு பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதேபோல கையக்கப்படுத்தப்பட்ட நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு நடந்து வருகின்றன. 2026 செப்டம்பர் மாதத்திற்குள் சுற்றுச்சுவர் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மொத்தமுள்ள 16 கி.மீ. தூரத்தில், 15 கி.மீ. தூரத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்படும். நிலம் கையகப்படுத்தல் முழுமை அடைந்த பின்னர், மீதமுள்ள பகுதிகளில் சுற்றுச்சுவர் கட்டப்படும். விமான நிலைய விரிவாகத்திற்கான 90 சதவீத நிலங்கள் கையக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள நிலம் கையக்கப்படுத்தும் பணிகள் அடுத்த ஓராண்டிற்குள் முடியும் என எதிர்பார்க்கிறோம். இப்பணிகள் முடிந்தவுடன்தான் விமான நிலைய விரிவாக்க பணிகள் துவங்கும்.
இந்த விரிவாக்க பணிகளில் தமிழ்நாடு அரசு நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. நிலத்தின் அளவை பொறுத்து விமான நிலையம் வடிவமைப்பு திட்டமிடப்படும். விரிவாக்கப் பணிகளை 3 ஆண்டிகளில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது கோவை விமான நிலைய ஓடுபாதை 2,900 மீட்டராக இருக்கிறது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு பின்பு 3,800 மீட்டராக ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்படும். புதிய ஓடுபாதை வந்த பிறகுதான் பெரிய விமானங்கள் கோவைக்கு வந்து செல்ல முடியும். கோவை விமான நிலையம் தற்போது இருக்கும் அளவை விட 4 மடங்கு அதிகமாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தற்போது 18 ஆயிரம் சதுர மீட்டராக இருக்கும் கோவை விமான நிலைய முனைய கட்டிடம் 75 ஆயிரம் சதுர மீட்டராக விரிவுபடுத்தப்படும். இது ஒரு மணி நேரத்தில் 4,200 பயணிகளை கையாளும் வகையில் அமைக்கப்படும். 14 புதிய விமான ஓடுபாதைகள், தனி டாக்சி பாதை ஆகியவை அமைக்கப்படும். விமான நிலையத்தின் முகப்பு தோற்றம் சின்னியம்பாளையம்-கொச்சின் புறவழிச்சாலையில் அமையும்.
தற்போதைய கட்டிடம் சரக்கு முனையமாக மாற்றப்படலாம் அல்லது வேறு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படலாம். விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதற்கு ஏற்ப தற்போதைய விமான நிலைய முனைய கட்டிடத்தில் இருக்கைகள், சார்ஜிங் பாயிண்ட், இலவச இணைய வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சில சர்வதேச விமானங்கள் இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.