பாட்னா: லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தில் மீண்டும் மோதல் வெடித்துள்ளதாக, அவரது மகள் ரோகிணி ஆச்சார்யாவின் சமூக வலைதளப் பதிவுகள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை கட்சியில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு நீக்கிய நிலையில், தற்போது அவரது மகள் ரோகிணி ஆச்சார்யாவின் சமூக வலைதளப் பதிவுகள், அந்தக் குடும்பத்தில் மீண்டும் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது.
தனது தந்தைக்கு கடந்த 2022ம் ஆண்டு சிறுநீரக தானம் செய்தவரான ரோகிணி, தனது சுயமரியாதை மற்றும் தியாகம் குறித்துப் பதிவிட்டுள்ள மர்மமான கருத்துக்கள், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளன. தேஜஸ்வி யாதவின் உதவியாளர் சஞ்சய் யாதவின் செல்வாக்கு கட்சியில் அதிகரித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே ரோகிணி இந்தப் பதிவுகளை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் பிரசாரப் பேருந்தின் முன் இருக்கையில், லாலு பிரசாத் அல்லது தேஜஸ்வி யாதவ் போன்ற தலைவர்களுக்குப் பதிலாக சஞ்சய் யாதவ் அமர்ந்திருந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியதே இந்த சர்ச்சைக்கு மூலக் காரணமாகும். இந்தப் புகைப்படத்தை விமர்சித்த ஒருவரின் பதிவை ரோகிணி பகிர்ந்ததுடன், தனது சுயமரியாதையே முக்கியம் என்றும், குடும்பத்திற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் உணர்ச்சிகரமான பதிவுகளை வெளியிட்டார்.
இந்த விவகாரத்தில் தனது சகோதரிக்கு, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தேஜ் பிரதாப் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். சர்ச்சை பெரிதானதைத் தொடர்ந்து, லாலு யாதவ் தனது மகளிடம் பேசியதாகவும், அதன் பிறகு ரோகிணி சிங்கப்பூர் திரும்பியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் தனது சமூக வலைதளக் கணக்கை முடக்கியதுடன், தேஜஸ்வி மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ கணக்கைப் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். பீகார் சட்டப் தேர்தலுக்கு முன்பாக எதிர்க் கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக தேஜஸ்வி யாதவ் இந்த சர்ச்சைகளை மறுத்துள்ளார். ஆனால், ஐக்கிய ஜனதா தளம் கட்சியோ, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் பெரும் ரத்தக்களறி ஏற்படப் போவதாக விமர்சித்துள்ளது. இந்தத் தொடர் குடும்ப மோதல்கள், வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலை அக்கட்சி எவ்வாறு ஒற்றுமையுடன் சந்திக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.