லாலு பிரசாத் யாதவ் உடன் சந்திப்பு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட தலைவரை சந்திப்பது பாசாங்குதனம்: சுதர்ஷன் ரெட்டியை விமர்சித்த பாஜ
புதுடெல்லி: லாலு பிரசாத் யாதவை எதிர்க்கட்சிகளின் துணை குடியரசு தலைவர் வேட்பாளரான சுதர்ஷன் ரெட்டி சந்தித்தை பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது. துணை குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுகின்றார். தனது பிரசாரத்தின்போது சுதர்ஷன் ரெட்டி, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரான லாலு பிரசாத் யாதவை நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பை பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து பாஜ மூத்த தலைவரான ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘சுதர்சன் ரெட்டியின் செயல்பாடு பாசாங்குதனமானது. இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றுவது பற்றி ரெட்டி பேசுகிறார்.
மேலும் தீவன ஊழலில் தண்டிக்கப்பட்டவர் மட்டுமல்ல, ரயில்வேயில் வேலைகளை வழங்குவது உட்பட அதிக ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் ஒருவரை சந்திக்கிறார். நீங்கள் என்ன மாதிரியான ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி. லாலு பிரசாத்யாதவ் தேர்தலில் வாக்காளர் கூட கிடையாது. தயவு செய்து ஆன்மாவை காப்பாற்றுவது பற்றி பேசாதீர்கள். இது மிகவும் பாசாங்குத்தனம். அவரது நடத்தையை நாங்கள் கண்டிக்கிறோம்” என்றார்.