லடாக்: லடாக் காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ளார். சோனம் வாங்சுக் விரைவில் லடாக்கிலிருந்து வெளியேற்றி, வேறு மாநில சிறையில் அடைக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
லடாக் யூனியன் பிரதேசத்தை தனி மாநிலமாக அறிவிக்க கேட்டு ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தை கடந்த 4 மாதமாக கிடப்பில் போடப்பட்டதால் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் செப்.10 ஆம் தேதி உண்ணாவிரதம் இருந்தார்.
அந்த உண்ணாவிரதத்தில் இருந்த 2 பேர் மயக்கம் அடைந்ததால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் நேற்று முன்தினம் முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அப்போது அவர்கள் பேரணியாக சென்ற போது பயங்கர வன்முறை வெடித்தது.
பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டனர். பா.ஜ அலுவலகம், பாதுகாப்பு வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கண்ணீர்குண்டு வீசப்பட்டது. தடியடி நடத்தப்பட்டது. இதில் 4 பேர் பலியானார்கள். 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் லடாக்கில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம் எனக் கூறி, போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பிற்பகல் 2:30 மணிக்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
சோனம் வாங்சுக் விரைவில் லடாக்கிலிருந்து வெளியேற்றி, வேறு மாநில சிறையில் அடைக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடந்த போராட்டத்தில் வாங்சுக் வன்முறையை தூண்டிவிட்டதாக உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.