Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

லடாக் போராட்டத்தில் வன்முறை தே.பா சட்டத்தில் வாங்சுக் கைது: கலவரம் நடந்து 2 நாட்களுக்கு பின் நடவடிக்கை

லே: லடாக் போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்கை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் இந்திய அரசியலமைப்பின் 6வது அட்டவணையின் கீழ் பாதுகாப்பு வழங்கக் கோரி காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த சூழலில், கடந்த 24ம் தேதி லே பகுதியில் நடந்த மாபெரும் போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற பாதுகாப்பு படையினர் துப்பாக்கிசூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். மூன்றாவது நாளாக நேற்று ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கினால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிகாரிகள் கூறுகையில்,‘‘ஒட்டு மொத்த பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தொடர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா,அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் அவர்கள் தொடர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்’’ என்றனர். கலவரத்தை தொடர்ந்து, சோனம் வாங்சுக்கின் ‘லடாக் மாணவர் கல்வி மற்றும் கலாசார இயக்கம்’ என்ற அமைப்பின் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட உரிமத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தது. வன்முறையில் தொடர்புடைய 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

லே கலவரத்துக்கு சோனம் வாங்சுக் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அரபு நாடுகளில் நடந்த போராட்டங்கள், நேபாளத்தில் ஜென் இசட் எழுச்சி பற்றிய குறிப்புகளுடன் அவர் ஆற்றிய ஆத்திரமூட்டும் உரைகளால்தான் வன்முறை ஏற்பட்டது என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. சிறையில் அடைப்பதற்கு ஒரு வழக்கை அரசு உருவாக்கி வருவதாக வாங்சுக் கூறினார். இந்த நிலையில் கலவரம் நடந்து 2 நாட்களுக்கு பின்னர் நேற்று மதியம் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

* குற்றவாளி போல் நடத்துகின்றனர் வாங்சுக் மனைவி குற்றச்சாட்டு

வாங்சுக்கின் சொந்த கிராமமான உல்யாக்டோபோவில் உள்ள வீட்டிற்கு சென்ற போலீஸ் படையினர் அவரை கைது செய்துள்ளனர். வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி அங்மோ,‘‘ எனது கணவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க அரசாங்கம் அவர் தேச விரோதி என்ற தவறான கதைகளை பரப்புகிறது. வீட்டை போலீசார் சூறையாடினர். ஒரு குற்றவாளியை போல் அவரை நடத்தினர். எந்த ஒரு காரணமும் இன்றி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஜனநாயகத்தின் மோசமான வடிவம் என்று தெரிவித்தார்.