லே: லடாக் யூனியன் பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் வீரர்களின் செயல்பாட்டு தயார் நிலை குறித்து லெப்டினன்ட் ஜெனரல் பிரதிக் சர்மா ஆய்வு செய்தார். லடாக் யூனியன் பிரதேசத்தின் லே பகுதிக்கு கடந்த 27ம் தேதி லெப்டினன்ட் ஜெனரல் பிரதிக் சர்மா வந்தடைந்தார். பின்னர் இவர் சியாச்சின் படைப்பிரிவு, கிழக்கு லடாக்கில் நிறுத்தப்பட்டுள்ள படைப்பிரிவுகள் மற்றும் காரகோரம் கணவாய் பகுதிகளில் ஆய்வு செய்தார்.
வீரர்களின் செயல்பாட்டுத் தயார் நிலையை மதிப்பாய்வு செய்தார். அனைத்து படைகளின் மன உறுதி, உறுதியான அர்ப்பணிப்பை அப்போது அவர் பாராட்டினார். தேசியக்கொடி வினாடி வினாவில் வெற்றி பெற்றவர்களுடன் அவர் கலந்துரையாடினார். தொடர்ந்து சியாச்சின் அடிவார முகாமில் 7000மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள சவாலான சிகரத்துக்கு மலையேற்றத்தையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக லடாக் கவர்னர் கவிந்தர் குப்தாவை லெப்டினன்ட் ஜெனரல் சர்மா சந்தித்தார். அப்போது பிராந்தியத்தில் ஒட்டுமொத்த பாதுகாப்பு சூழ்நிலை, வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் அமைதி, ஸ்திரதன்மையை பேணுவதற்கு சிவில் நிர்வாகம் மற்றும் ஆயுதப்படைகளுக்கு இடையே மேம்பட்ட ஒருங்கிணைப்பின் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.