தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது மாஞ்சோலை எஸ்டேட்டை அரசே ஏற்க வாய்ப்புள்ளதா? அறிக்கை கேட்கிறது ஐகோர்ட் கிளை
மதுரை: திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ரோஸ்மேரி, ஜான்கென்னடி, புதியதமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அந்த பகுதியிலேயே வாழ்ந்து பழகிவிட்டனர். அவர்களுக்கு அரசின் டான்டீ நிர்வாகம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று தங்களின் பொறுப்பில் நடத்தினால் அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும். குத்தகை காலம் வருகிற 2028ம் ஆண்டு முடிவடைகிற நிலையில் தற்போதே பிபிடிசி நிறுவனத்தினர், தொழிலாளர்களை வௌியேற்ற முயற்சி செய்கிறது. தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், அரசு பிளீடர் பி.திலக்குமார் ஆகியோர் ஆஜராகி, இந்த விவகாரம் தேயிலை தோட்டத்தை நடத்திய பிபிடிசி தனியார் நிறுவனத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையேயானது. மாஞ்சோலை தேயிலை தோட்டத்தின் ஒரு பகுதி வனப்பகுதி. பாதுகாக்கப்பட்ட தேசிய புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அரசின் நிலைகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கூறப்பட்டது.
பிபிடிசி நிறுவனம் சார்பில், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை இழப்பீடாக வழங்க தயாராக உள்ளோம் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘தலைமுறை, தலைமுறையாக மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் தங்கி வசித்து பணி செய்த தொழிலாளர்களை மாற்றுப்பணிக்காக இடம் பெயரச்செய்வது சற்று கடினம். இந்த விஷயத்தில் அவர்களிடம் மனிதாபமான முறையில் நடந்து கொள்ளவேண்டும். சிலர் பிபிடிசி நிறுவனம் வழங்கும் இழப்பீட்டு தொகையை பெற்று சென்றுவிடலாம் என நினைக்கின்றனர். இந்த விஷயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன?. தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வாய்ப்புள்ளதா?.
இல்லாவிட்டால் அவர்களின் மறுவாழ்வுக்கு என்ன செய்ய முடியும் என்பதை அரசுத் தரப்பில் தெரிவித்தால் தான், நிரந்தர தீர்வு காண முடியும். தொழிலாளர்களுக்கான 75 சதவீத இழப்பீட்டு தொகையை நாகர்கோவில் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பிபிடிசி நிறுவனம் ஒப்படைக்க வேண்டும். தொழிலாளர்கள் அங்கு சென்று அதிகாரிகளிடம் கடிதம் வழங்கி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம். தேயிலை தோட்ட தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்ற கூடாது. அவர்களின் மறுவாழ்விற்கு நிரந்தர திட்டம் குறித்து அரசின் நிலைப்பாட்டை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 22க்கு தள்ளி வைத்தனர்.