நாடு முழுவதும் 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்; முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழிலாளர் நலனை பலிகொடுக்க கூடாது: ஒன்றிய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் கருத்து
புதுடெல்லி: முதலீடுகளை ஈர்க்கவும், வர்த்தகத்தை எளிதாக்கவும் வேலைவாய்ப்பை பெருக்கவும் ஒன்றிய அரசு புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தியுள்ள நிலையில், இது தொழிலாளர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்தியாவில் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த 29 வகையான சிக்கலான தொழிலாளர் நலச் சட்டங்களை ஒன்றிணைத்து, ஒன்றிய அரசு தற்போது 4 புதிய சட்டத் தொகுப்புகளாகச் சுருக்கி அமல்படுத்தியுள்ளது. நாட்டில் தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கும், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் பல்வேறு பதிவுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் நீக்கப்பட்டு, ‘ஒரே பதிவு, ஒரே உரிமம்’ என்ற எளிமையான நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தேவையற்ற தலையீடுகளைக் குறைத்து, வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் என ஒன்றிய அரசுத் தரப்பில் விளக்கம் அளிப்பட்டுள்ளது.
புதிய சட்டங்களின்படி, இதுவரை சமூகப் பாதுகாப்பு வரம்பிற்குள் வராத அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் இணையம் சார்ந்த பணியாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி, காப்பீடு மற்றும் பேறுகால நலன்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும் 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் இலவச மருத்துவப் பரிசோதனை, அனைத்து ஊழியர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்குதல், பாலின வேறுபாடின்றி சம ஊதியம் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ‘பெண்கள் இனி இரவு நேரப் பணிகளிலும் ஈடுபடலாம்’ என்று அறிவித்துள்ள ஒன்றிய அரசு, அதற்கான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை நிறுவனங்கள் செய்து தரவேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.
இருப்பினும், இந்தச் சீர்திருத்தங்கள் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதாகத் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, 300 பணியாளர்கள் வரை உள்ள நிறுவனங்கள் அரசின் முன் அனுமதியின்றி ஆட்களை வேலையை விட்டு நீக்கலாம் அல்லது நிறுவனத்தை மூடலாம் என்ற புதிய விதிமுறை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்பு இந்த வரம்பு 100 பணியாளர்களாக வரையறை இருந்தது. இந்த புதிய சட்டத்தினால், நிறுவனங்கள் தங்கள் இஷ்டப்படி ஆட்களை வேலைக்கு எடுப்பதையும், காரணமின்றி நீக்குவதையும் ஊக்குவிக்கும் என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. மேலும், வேலைநிறுத்தம் செய்வதற்கு 14 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறை, தொழிலாளர்களின் போராட்ட உரிமையை நசுக்குவதாக உள்ளதெனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நிரந்தர வேலைவாய்ப்பிற்குப் பதிலாகக் குறிப்பிட்ட கால ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யும் முறை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளதால், நிரந்தரப் பணியிடங்கள் குறையும் அபாயம் உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. இதுகுறித்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘சர்வதேச தொழிலாளர் அமைப்பின் விதிமுறைகளை மீறி, எங்களுடன் முறையான ஆலோசனை நடத்தாமலே ஒன்றிய அரசு இந்தச் சட்டங்களைத் திணித்துள்ளது’ என்று வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் சிறிய நிறுவனங்களில் பணிபுரியும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் அரசின் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேற்றப்படும் சூழல் உருவாகியுள்ளதாக எச்சரிக்கும் அவர்கள், முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தொழிலாளர் நலனை அரசு பலிகொடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


