தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் எஸ்.ஐ.ஆர். பணிகளை கைவிட வேண்டும்: சிஐடியு மாநில மாநாட்டில் தீர்மானம்
கோவை: கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் அரங்கில் சிஐடியு தொழிற்சங்கத்தின் 16-வது மாநில மாநாடு நேற்று (வியாழன்) தொடங்கியது. வருகிற 9ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, மாநாட்டு ஸ்தூபிக்கு மலர்தூவி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் தலைமை தாங்கி பேசினார். அகில இந்திய பொதுச்செயலாளர் தபன்சென் தொடக்க உரை நிகழ்த்தினார்.
பின்னர் தொமுச அகில இந்தியத் தலைவர் கி.நடராஜன், ஏடியூசி மாநில பொதுச்செயலாளர் ம.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு எச்.எம்.எஸ் மாநில செயலாளர் டி.எஸ்.ராஜாமணி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த மாநாட்டில் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், பாஜவின் அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாடு குறித்து மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன், நிருபர்களிடம் கூறியதாவது: அனைத்து தொழிற்சாலைகளிலும், தொழிலாளர்களை நிரந்தரமற்றவர்களாக்க வேண்டும், தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு இருக்கக் கூடாது தொழிற்சங்கங்கள் இருக்கக்கூடாது என்பதுதான் கார்ப்பரேட் நிறுவனங்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதனை நிறைவேற்றுவதற்கு அனைத்து நாட்டு அரசுகளும் முயற்சிக்கின்றன. இந்தியாவிலும் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் கடுமையாக அதற்கு முயற்சிக்கிறது. சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் கைவிடப்பட வேண்டும் என இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அதை எதிர்த்து செயல்பட்டுக் கொண்டிருக்க கூடிய அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகளுடன் இணைந்து வலுவாக போராடுவது என்று தீர்மானித்துள்ளோம்’’ இவ்வாறு அவர் கூறினார்.
