Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

பெரம்பூர்: குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கொளத்தூரில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். வடசென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டபணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று காலை களஆய்வு செய்தார். அந்த வகையில், திரு.வி.க.நகர் பேருந்து நிலையம், அகரம் ஜெகநாதன் தெருவில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மையம், பெரியார் நகர் பேருந்து நிலையம், பேப்பர் மில்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் நவீன சந்தை மற்றும் பேப்பர் மில்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், பகிர்ந்த பணியிட மையம் எனப்படும் மக்கள் சேவை மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளர் காகர்லா உஷா, கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதையடுத்து நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: சென்னை பெருநகர வளர்ச்சி குழும சார்பில் 13 பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மகாபலிபுரம், செங்கல்பட்டு, ஆவடி மற்றும் தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேம்படுத்தப்பட்டு வரும் பேருந்து நிலையங்கள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முத்திரைகளாக உருவாக்கப்பட்டு வருகிறது. பெரியார்நகர் மற்றும் திருவிக நகர் பேருந்து நிலை யங்களை மேம்படுத்தும் பணி துவக்கப்பட்டு அடுத்த மாதம் ஜூலை இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

ஏழை, எளிய மக்களுக்கு கட்டணம் இல்லாமல் டயாலிசிஸ் சென்டர் உருவாக்கப்பட்டு துறைமுகம் மற்றும் கொளத்தூரில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் அனைத்தும் நிறைவேறும்போது வடசென்னை மக்களின் தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தியாகி இருக்கும். குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 50 சதவீதம்கூட நிறைவேற்றவில்லை என அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குபவர்களை போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. அண்ணாமலையை மேடை ஏற சொல்லுங்கள், சொன்னதை எத்தனை செய்துள்ளோம், சொல்லாததை எத்தனை செய்துள்ளோம் என பட்டியலிடுகிறோம்.

குறை சொல்லக்கூடிய தரத்தில் இருப்பவர்கள் குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அரசியல் களம் வேண்டும் என்பதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை போன்றோர் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். நடுநிலையாளர்கள் திமுக ஆட்சியை பாராட்டுகிறார்கள், வசை பாடியவர்கள்கூட வாழ்த்துகிறார்கள். முடிச்சூர் பேருந்து நிலையத்தை பொருத்தவரை நீதிமன்ற வழக்கு நிறுவையில் உள்ளது. கூடிய விரைவில் வழக்கை இறுதிக்கு கொண்டு வந்து முடிச்சூர் பேருந்து நிலையத்தை ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பயன்படுத்தும் அளவிற்கு மேம்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.