Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குத்தகை நிலத்தில் தேனீ வளர்ப்பு...

சென்னை அம்பத்தூரில் வீடு. அங்கிருந்து இருபத்தியேழு கிலோமீட்டர் தொலைவில் திருவள்ளூர் சோழவரத்தில் இருக்கிறது குத்தகைக்கு எடுக்கப்பட்ட வயல்காடு. தினமும் இவ்வளவு தூரம் பயணம் செய்துதான் தேனீ வளர்ப்பில் ஈடுபடுகிறார் வெங்கடேசன்.சென்னை மாநகரில் வசிக்க நேர்ந்தாலும் இன்னும் ஒரு கிராமத்து விவசாயி வாழ்வை அனுபவித்து வரும் வெங்கடேசன் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்னோடியானவர். கல்லூரி படித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை. அந்த வேலையில் ஒரு சிக்கல் வந்தபோது துணிச்சலோடு ஒரு தற்சார்பு வாழ்க்கை முறைக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு அதில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். அவரைச் சந்தித்தபோது சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

``தாத்தா, அப்பா காலத்தில் எங்களுக்கு வாழ்வாதாரமே விவசாயம்தான். அதுவும் தண்ணீர் பற்றாக்குறையால் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு, விவசாயம் செய்வேனென்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. நான் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்குப் போனேன். வேலைக்குப் போகும்போதே நம் தேவைக்காக கோழி வளர்க்கலாம் என முடிவெடுத்து வீட்டு மாடியில் 10 சிறுவிடைக் கோழிகளை வாங்கி வளர்க்கத் தொடங்கினேன். அந்த 10 கோழிகளில் இருந்து 100 கோழிகள் உற்பத்தி ஆனது. தினமும் 50 முட்டைகளுக்கு குறையாமல் கிடைக்கும். அதனை என்னுடன் வேலை பார்க்கும் நண்பர்கள், உறவினர்களிடம் விற்பனை செய்தேன். அதைத் தொடர்ந்து எனது மாடியில் 450 கோழிகள் வரை வளர்க்கத் தொடங்கினேன். அதேசமயம் மாடியில் தேன் பெட்டிகள் வைத்து தேனீ வளர்ப்பையும் தொடங்கினேன். முட்டை விற்பனை, கோழி விற்பனை, தேன் விற்பனை என பிசியாக இருந்த நேரத்தில்தான் எனது அலுவலகத்தில் என்னை வேறு ஊருக்கு பணி மாற்றம் செய்தார்கள். என்னால் கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பைக் கை விட முடியாது என்பதால், பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு முழுமையாக கோழி மற்றும் தேனீ வளர்ப்பைத் தொடங்கலாம் என முடிவெடுத்தேன்.

வேலையை விட்ட பிறகு தேனீ வளர்ப்பை பெரிய அளவில் தொடங்குவதற்கு திருவள்ளூர் சோழவரத்தில் 5 ஏக்கர் அளவில் தோட்டம் ஒன்றை குத்தகைக்கு எடுத்தேன். அதில் 450 கோழிகளுடன் தேனீ வளர்ப்பையும் தொடங்கினேன். தேனீ வளர்ப்பு சார்ந்து எனக்கு சிறிதளவுதான் பயிற்சி இருந்தது. அதனை முழுமையாக கற்றுக்கொள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கேவிகே-யில், தேனீ வளர்ப்பு சார்ந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். அங்குதான் தேனீ வளர்ப்பு சார்ந்து எனக்குத் தெரியாத பல விசயங்களைக் கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில் கோவையில் இருந்து தேனீக்களோடு சேர்ந்த தேன் வளர்க்கும் பெட்டியை ரூ.3600 என்ற விலையில் வாங்கி வந்தேன். அதன்பின், கேவிகே-யில் பயிற்சி எடுத்துக் கொண்டதால், அங்கிருந்து 3 தேனீ பெட்டிகள் கொடுத்தார்கள். மொத்தம் நான் வாங்கியது 4 தேனீ பெட்டிகள்தான். ஆனால், தற்போது எனது தோட்டத்தில் இருப்பது 90 தேனீ பெட்டிகள். தேன் வளர்ப்பில் இரண்டு முறையில் வருமானம் பார்க்கலாம். ஒன்று தேன் வளர்த்து விற்பது. மற்றொன்று தேனீக்களை உற்பத்தி செய்து அதனை வேறு தேனீ பெட்டிக்கு மாற்றி தேனீ பெட்டியாக விற்பது. நான் இரண்டு முறையிலுமே விற்பனை செய்து வருகிறேன்.

ஜனவரி முதல் மே மாதங்கள் வரை தேன் வளர்ப்புக்கு உகந்த சீசன். இந்த மாதங்களில் தேன் பெட்டியில் இருக்கிற தேனீக்கள் சுமார் 3 கி.மீ சுற்றளவில் சுற்றி அலைந்து பூக்களில் இருந்து தேன் சேகரிக்கும். நான் தேனீ வளர்க்கும் இடத்தைச் சுற்றி மாமரங்களும் முந்திரி மரங்களும் இருப்பதால் தேனீக்கள் அங்கிருந்து தேன் எடுத்து வருகின்றன. அதுபோக, தேன் பெட்டிகளுக்கு நடுவே சீனியையும் தண்ணீரையும் கலந்து வைப்போம். தேனீக்களுக்கு தேன் கிடைக்காத சமயத்தில் இந்த சீனிப் பாகுவை உணவாக எடுத்துக் கொள்ளும். சுமார் ஆறு வருடங்களாக தேன் உற்பத்தி செய்து வருகிறேன். ஒரு தேன் பெட்டியில் இருந்து 3 முதல் 5 லிட்டர் தேன் கிடைக்கும். அந்த வகையில் இந்த வருடம் 240 லிட்டர் தேன் எனக்கு கிடைத்தது. ஒரு லிட்டர் தேனை ரூ.800க்கு விற்பனை செய்தேன். அதுபோக, இந்த முறை அதிகமான எண்ணிக்கையில் 220 தேன் பெட்டிகள் வரை விற்பனை செய்தேன். ஒரு பெட்டியை ரூ.2400க்கு விற்பனை செய்கிறேன். சராசரியாக ஒரு தேன் பெட்டி தயாரிப்பிற்கு ரூ.650ம், அந்த தேன் பெட்டிக்கு தேவையான தேனீக்களை உற்பத்தி செய்வதற்கான சீனி தயாரிப்பிற்கு ரூ.150ம் செலவு ஆனது. அந்த வகையில் ஒரு பெட்டி விற்பனை செய்தால் ரூ.1600 வரை லாபம் எடுக்கலாம். ஆனால் இந்த லாபத்தை எடுப்பதற்கு நாம் ஒரு சீசன் முழுவதும் காத்திருக்க வேண்டும்’’ என்கிறார்

வெங்கடேசன்.

தொடர்புக்கு:

வெங்கடேசன்: 70108 88145

தோட்டங்களுக்கு நடுவே தேனீ வளர்ப்பை செய்வதில் சில நல்ல விசயங்கள் இருக்கின்றன என்கிறார் வெங்கடேசன். அதாவது மாமரம் போன்ற பழ மரங்களுக்கு நடுவே தேனீக்களை வளர்க்கும்போது, தேனீக்கள் அதிகளவில் மகரந்த சேர்க்கையை நிகழ்த்தும். அப்படி செய்யும்போது தோட்டங்களில் விளைச்சல் அதிகரிக்கும். அதே சமயம் அந்த பழங்கள் சுவையாகவும், அதிக எண்ணிக்கையிலும் இருக்கும் என்கிறார்.