நடப்பாண்டு குறுவை பருவத்தில் 3.92 லட்சம் மெட்ரிக் டன் நெல் கூடுதலாக கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்
தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பருத்தியப்பர் கோயிலில் உள்ள திறந்த வெளி நெல் சேமிப்பு மையம், திருவையாறு அருகே விளாங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆகியவற்றை அமைச்சர் சக்கரபாணி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டை பொறுத்தவரை குறுவை நெல் கொள்முதல் செப்டம்பர் 1ம் தேதி துவங்கப்பட்டது.
தமிழகத்தில் டெல்டா மாவட்ட குறுவை நெல் சாகுபடி பரப்பளவு 6.31 லட்சம் ஏக்கராக அதிகரித்ததன் காரணமாக கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும் ஹெக்டேருக்கு 6 மெட்ரிக் டன் அளவில் நெல் உற்பத்தியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 1,728 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கடந்த 8ம் தேதி வரை 7.02 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 97,125 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு ரூ.1606.65 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டில், இதே தேதியில் தமிழ்நாட்டில் 979 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3.10 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 44,913 விவசாயிகளுக்கு ரூ.755 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக 52,212 விவசாயிகளிடம் 3.92 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களிலிருந்து தினசரி 35000 மெட்ரிக் டன் நெல் வெளி மாவட்டங்களுக்கும், கிடங்குகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.