திருச்சி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் விட்டு விட்டு மழை பொழிந்து வருகிறது. 2வது நாளாக இன்றும் மழை நீடித்தது. மழை காரணமாக திருவாரூர் அருகே கங்களாஞ்சேரி வெட்டாறு, வலங்கைமான் சுள்ளன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் ஆங்காங்கு அடைப்புகளை சரி செய்து, ஆகாயதாமரை செடிகளை அகற்றி தடையின்றி நீரோட்டம் இருக் பணியாளர்கள் நடவடிக்கை எடுத்தனர். தஞ்சை அருகே காட்டூர், பாபநாசம், அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 10,000 ஏக்கர் அறுவடைக்கு தயாரான குறுவை பயிர், 25,000 ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.
திருவாரூரில் மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், ஆதிச்சமங்கலம், நார்த்தாங்குடி, குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் 40,000 ஏக்கர், நாகையில் கீழ்வேளூர், வேதாரண்யம், திருக்குவளை பகுதிகளில் 10,000 ஏக்கர், திருச்சியில் 15,000 ஏக்கர் சம்பா பயிர், அறுவடைக்கு தயாரான குறுவை என சுமார் 1 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி, குறுவை பயிர்களை மழை நீர் சூழ்ந்துள்ளது. நாகையில் 10,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் 2வது நாளாக இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று 5ம் நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 1000 மீனவர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். தஞ்சை, புதுகையில் 400 விசைபடகுகள் கடலுக்கு செல்லவில்லை. திருச்சி புங்கனூரில் மலைபட்டிகுளம் இன்று நிறைந்து வழிந்தது. இதனால் அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
10,000 மணல் மூட்டைகள் தயார்
மயிலாடுதுறையில் பருவமழை பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலைகளில் உடைப்பு, சாலை உள்வாங்குதல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக தற்காலிகமாக சீர் செய்வதற்காக மயிலாடுதுறை, செம்பனார்கோவில், சீர்காழி கோட்டங்களில் 10,000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ெபாக்லைன் இயந்திரங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் உட்பட அனைத்து இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.