குறுவை சாகுபடி கொள்முதல் முடிய சில நாட்களே உள்ளது; 22% நெல் ஈரப்பதம் அறிவிப்பு என்னாச்சு? மாமியார் வீட்டு விருந்துக்கு வந்து ஆய்வு செய்த புதுமாப்பிள்ளையை காணோம்: ஒன்றிய அரசு மீது விவசாயிகள் பாய்ச்சல்
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். கடந்த ஜூன் 12ம் தேதி, குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் ஜூன் 15ம் தேதி கல்லணை வந்தடைந்தது. அதனை காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் சரியான முறையில் தூர்வாரியதால் கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதி வரை சென்றடைந்தது.
இதை பயன்படுத்தி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்கினர். டெல்டா மாவட்டம் முழுவதும் சுமார் 6 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. தஞ்சாவூரில் 1.97 லட்சம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 1.94 லட்சம் ஏக்கர், நாகை மாவட்டத்தில் 1.15 லட்சம் ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.05 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இலக்கை மிஞ்சி சாகுபடி பரப்பு அதிகரித்து, நெல் விளைச்சலும் அதிகரித்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் கடந்த மாதம் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் சேதமடைந்தது.
அதோடு அறுவடை செய்யப்பட்ட நெல் மழைநீரில் நனைந்து போனது. இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசுக்கு கண்காணிப்பு குழுவை தமிழகத்துக்கு அனுப்பி சேதம் குறித்து ஆய்வு செய்வதோடு, நெல்லின் ஈரப்பதத்தை தளர்த்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் அனுப்பினார். அதன் அடிப்படையில் ஒன்றிய கண்காணிப்பு குழு கடந்த மாதம் 26, 27ம் தேதிகளில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வுக்கு வந்த ஒன்றிய குழுவிடம் விவசாயிகள் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்தி தளர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு ஒன்றிய குழுவினர், நாங்கள் சென்று அறிக்கையை ஒப்படைத்து பிறகு அறிவிப்பு வெளியிடப்படும் என கூறிவிட்டு சென்றனர். ஆனால், இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதையடுத்து விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை தாங்களே காய வைத்து 17 சதவீத ஈரப்பதத்துடன் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்தனர்.
20 தினங்கள் ஆகியும் இதுவரை ஈரப்பதம் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பையும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை. விவசாயிகள் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளதால் நஷ்டம் ஏற்படாமல் இருக்க நெல்லை அவர்களே காயவைத்து விற்பனை செய்துள்ளனர். ஒன்றிய அரசு இன்று அறிவிப்பு வெளியிடும் நாளை அறிவிப்பு வெளியிடும் என காத்துக் கிடந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இனி வரும் காலங்களில் நெல்லின் ஈரப்பத தளர்வு குறித்து அறிவிப்பை மாநில அரசுகளே அறிவிக்கலாம் என்ற அரசாணையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உடனடியாக ஈரப்பத தளர்வு குறித்த அறிவிப்பினை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும். அது நிரந்தர அரசாணையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கேட்டு பெற வேண்டிய அவசியம் இருக்க கூடாது. மழையால் பாதிக்கப்பட்ட நெல்மணிகள் ஈரப்பத தளர்வு குறித்து ஒன்றிய குழு ஆய்வு என்பது சம்பிரதாய சடங்கு, கண் துடைப்பு. இதுவரை ஒன்றிய அரசு நெல் ஈரப்பத தளர்வு குறித்த அறிவிப்பினை வெளியிடாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் ஜீவகுமார்: கண்காணிப்பு குழுவினர் அவர்களது கைகளாலேயே நெல் குவியலை கிளறி கிளறி எடுத்து ஆய்வு செய்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு ஒரு குழுவை அனுப்ப வேண்டியது. அவர்கள் வருவார்கள், அனைத்தையும் ஆய்வு செய்வார்கள், திரும்பி சென்று விடுவார்கள். வந்ததற்கான எந்த ஒரு பயனும் இல்லாமல் சென்று விடுவார்கள்.
இவர்கள் வரும் வரை விவசாயிகள் நாங்கள் காலையிலிருந்து மாலை வரை காத்திருக்க வேண்டியது தான். ஒன்றிய அரசு குழு தொடர்ந்து எதுக்கு வருகிறார்கள் என்பது தெரியவில்லை. ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. தொடர்ந்து வஞ்சிக்கிறது. எதோ புது மாப்பிளை மாமியார் வீட்டுக்கு விருந்து சாப்பிட வருவது போல் ஒன்றிய குழு, வந்து விருந்து சாப்பிட்டு போவது போல் இருக்கிறது.
தமிழ்நாடு நலிவுற்ற விவசாய சங்க மாநில தலைவர் முகமது இப்ராஹிம்: ஈரப்பதம் குறித்து ஒன்றிய அரசு தான் நிர்ணயிக்க வேண்டும் என்பது விதி. மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. தற்போது ெடல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் கிட்டத்தட்ட அறுவடை முடிந்துவிட்டது. நெல் கொள்முதலும் முடிய சில நாட்களே உள்ளது. இந்த ஆண்டும் அதேபோல் மாநில அரசு கடிதம் எழுதினார்கள். அதேபோல் ஒன்றிய குழு வந்து ஆய்வு செய்தது.
இன்று வரை எந்த பதிலும் சொல்லவில்லை. எங்களது கோரிக்கையானது 17 சதவீதம் என்பது குறுவை சாகுபடியில் ஈரப்பதம் அதிகமாகத் தான் இருக்கும். அதனால் 22% வரை ஈரப்பதம் இருக்கலாம் என்று கோரிக்கை வைக்கிறோம். ஒன்றிய அரசு தொடர்ச்சியாக விவசாயிகளை அலட்சியப்படுத்தி வருகிறது. எங்களுக்கு உடனடியாக அறிவிப்பை வெளியிட வேண்டும். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார்: டெல்டா மாவட்ட பகுதிகளில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஒன்றிய குழு ஆய்வு செய்தது.
அந்த அறிக்கையை ஒரு வாரத்திற்குள் நாங்கள் சமர்ப்பிப்போம் என கூறிவிட்டு குழு சென்றுவிட்டது. ஆனால் தற்போது இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் ஒன்றிய அரசு வெளியிடாதது வேதனை அளிக்கிறது. விவசாயிகளின் கஷ்டத்தை தமிழக அரசு கடிதம் மூலமாக ஒன்றிய அரசுக்கு அனுப்புகிறது. ஆனால், ஒன்றிய அரசு தமிழகத்துக்கு எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்காமல் தமிழகத்தை ஓரம் கட்டி வருகிறது. மத்தியில் ஆளுகின்ற பாஜ அரசு விவசாயிகள் பக்கம் நிற்கிறோம் என பொய்யாக காட்டிக் கொள்வதற்காக ஆய்வுக் குழுவை அனுப்பி பொய்யாக ஆய்வு செய்து விட்டு சென்று விட்டார்கள். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


