குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் முதன் முறையாக முழங்கால் மூட்டு மாற்றும் அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை
வடலூர்: குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் முதன் முறையாக முழங்கால் மூட்டு மாற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குறிஞ்சிப்பாடி அருகே மேலப்புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாலு (60) என்பவர் கடந்த ஒரு வருடமாக தனது இரண்டு முழங்காலிலும் உள்ள மூட்டு வலியால் மிகவும் சிரமத்துடன் நடந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக முழங்கால் வலி மிகவும் அதிகமானதால் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையை நாடினார் அங்கு எலும்பு முறிவு மருத்துவரான டாக்டர் கணேஷ் அவருக்கு பரிசோதனை செய்து இறுதி கட்ட முழங்கால் மூட்டு தேய்மானம் உள்ளது எனவும் அதற்கு முழங்கால் மூட்டு மாற்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 24ம் தேதி அன்று குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் மணிபாலன் தலைமையில் எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் கணேஷ் ஆகியோரால் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் இடது முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு மறு தினமே அறுவை சிகிச்சை செய்து கொண்ட பாலுவை நடக்க வைத்தனர்.
வரும் காலத்தில் பாலுவுக்கு வலது முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் இதே குழுவினரால் கடந்த மாதம் இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
