Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இல்லாத குறளை இயற்றிய ஆளுநர் மாளிகை

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சார்பில் இல்லாத திருக்குறளை அச்சிட்டு மருத்துவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிய விவகாரம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ தினத்தையொட்டி, கிண்டிஆளுநர் மாளிகையில் மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா கடந்த 13ம்தேதி நடந்தது. தமிழகத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் 50 மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டு ஆளுநர்ரவி நினைவு பரிசு வழங்கினார்.

இந்த கேடயத்தில் திருக்குறள் ஒன்று அச்சிடப்பட்டிருந்தது. அந்த திருக்குறளின் வரிசை எண் 944 என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த திருக்குறள்தான் மிகப் பெரிய பேசுபொருளாகி உள்ளது. திருக்குறளில் அப்படி ஒரு குறளே கிடையாது என்பது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருக்குறள் புத்தகத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் அச்சிட்ட குறளை தேடிய போது, 944-என்ற எண் வரிசையில் அப்படி ஒரு திருக்குறள் இல்லை என்பது தெரிந்தது.

அந்த திருக்குறள் ஒரு போலி திருக்குறள் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், ஆளுநர் மாளிகை நிர்வாகம் 50 மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திரும்ப பெற திட்டமிட்டிருப்பதாகவும் திருக்குறள் திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தமிழறிஞர்கள் பலரும் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். அதாவது, திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்தால் மட்டும் போதாது, அவருடைய 4 குறள்களையாவது படித்து தெர்ந்துகொள்ள வேண்டும். இது திருக்குறளுக்கும், வள்ளுவருக்கும் நேர்ந்த அவமானம் என்று தெரிவிக்கின்றனர்.

* ஆளுநர் மாளிகை அச்சிட்ட திருக்குறள்

செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு

மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு (திருக்குறள்-944)

* திருவள்ளுவர் எழுதிய 944வது குறள்

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து.