Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குன்றத்தூர் முருகன் கோயிலில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் குவிந்தனர்: இன்று சூரசம்காரம்

குன்றத்தூர்: கொட்டும் மழையிலும் குன்றத்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை சூரசம்காரம் நடக்க உள்ளதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இக்கோயிலுக்கு சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து, சுவாமி தரிசித்து விட்டு செல்வார்கள்.

இந்நிலையில் இக்கோயிலில் கந்தசஷ்டி விழா சிறப்பாக கடந்து வருகிறது.

இன்று மாலை சூரசம்காரம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வரிசையில் காத்திருந்து அரோகரா கோஷம் எழுப்பியபடி தரிசனம் செய்து விட்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். பக்தர்களின் வசதிக்காக இலவச மற்றும் நூறு ரூபாய் கட்டண தரிசன வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மேலும், ரூ.300 லட்சார்ச்சனை கட்டணம் மூலம் பக்தர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டது.

முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நிகழ்ச்சி இன்று மாலை கோயில் வளாகத்தில் நடைபெற உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த ஆலயத்தில் சூரசம்ஹாரம் நடைபெறாமல் இருந்தது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கடந்த 2 ஆண்டுகளாக சூரசம்ஹாரம் நடந்து வருகிறது. 3வது ஆண்டாக இன்று சூரசம்ஹாரம் நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் சார்பில் அரங்காவலர் குழு தலைவர் செந்தாமரை கண்ணன் மற்றும் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா ஆகியோர் மேற்கொண்டு வருகின்றன. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கவும், பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் குன்றத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருத்தணி முருகன் கோயிலில் இன்று மாலை புஷ்பாஞ்சலி: திருத்தணி முருகன் கோயிலில், கந்தசஷ்டி பெருவிழாவில் சிறப்பு பெற்ற புஷ்பாஞ்சலியொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 22ம் தேதி சண்முகருக்கு லட்சார்ச்சனையுடன் தொடங்கி நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவை யொட்டி தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்து வருகிறது. காவடி மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் சண்முகருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வில்வ இலைகளால் லட்சார்ச்சனை நடைபெற்று வருகிறது.

6வது நாளான இன்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். காவடி மண்டபத்தில் சண்முகர் வண்ண மலர் அலங்காரத்தில் லட்சார்ச்சனை நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான புஷ்பாஞ்சலி இன்று மாலை நடக்கிறது. இதையொட்டி திருத்தணி பூ மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 5 டன் மலர்கள் மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக மலைக்கோயிலுக்கு எடுத்து செல்கின்றனர். பின்னர், சண்முகருக்கு புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் முருகன் மலைக்கோயிலில் குவிந்தனர். விழாவில் கடைசி நாளான நாளை காலை உற்சவருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெற உள்ளது.