பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்குச் சென்ற பக்தர்களின் கார் பேருந்து மீது மோதிய விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வருகின்றனர். இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் காரில் புறப்பட்டு சென்றனர். அவர்களுடைய கார் பிரயாக்ராஜ்-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் உள்ள மேஜா பகுதியில் அதிகாலை 2.30 மணியளவில் பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த 10 பேரும் உயிரிழந்தனர். பஸ்சில் இருந்த பயணிகளில் சிலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்வரூப ராணி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் பற்றி காவல்துறை விசாரித்து வருகின்றனர். மேலும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்களை தெரிவித்துள்ளார். நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.