நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி: 18 நாட்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
தேனி: பெரியகுளம் அருகே, கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, 18 நாட்களுக்கு பிறகு இன்று சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், அவர்கள் உற்சாகம் அடைந்தனர். தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிறமாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து இயற்கையை ரசித்து குளித்துச் செல்கின்றனர். முக்கிய விஷேச தினங்கள், விடுமுறை நாட்களில் அதிகளவில் பயணிகள், பொதுமக்கள் வருகை தருவது வழக்கம்.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் மலைப்பகுதிகளில் கடந்த 10ம் தேதி கனமழை பெய்தது. இதையடுத்து நீர்வரத்து வெகுவாக அதிகரித்து அருவியில் கடந்த 11ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்தது. நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தததால் வெள்ளப்பெருக்கு நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை குறைந்ததை அடுத்து இன்று அருவிக்கு நீர்வரத்து சீரடைந்தது. இதையடுத்து 18 நாட்களுக்குப் பிறகு அருவியில் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதனால் அருவிப்பகுதிக்கு வந்து காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர்.
