சென்னை பார்க்டவுனில் உள்ள கந்தகோட்டம் முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து துவக்கினார்
சென்னை: சென்னை பாரிமுனை அருகே பார்க்டவுன் பகுதியில் வரலாற்று பிரசித்தி பெற்ற கந்தகோட்டம், ஸ்ரீகந்தசுவாமி கோயில் என வழங்கும் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா, கடந்த 10ம் தேதி விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. இதைத் தொடர்ந்து, இன்று காலை ஆறாம் கால யாகபூஜை, விசேஷ திரவிய ஹோமம், மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ரா தானம், கலசங்கள் புறப்பாடு நடந்தது. இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் சிவாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேகத்தை மிகச் சிறப்பாக நடத்தி வைத்தனர்.
இக்கும்பாபிஷேகத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மூலவர் ஸ்ரீகந்தசுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ முத்துக்குமார சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம், தீர்த்த பிரசாதமும் மதியம் மகா அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் இன்று மாலை ஸ்ரீ தேவசேனா திருக்கல்யாணமும், இரவு 8:00 மணிக்கு ஸ்ரீமுத்துக்குமார சுவாமி தங்கமயில் வாகனத்திலும், அனைத்து பரிவாரங்களும் தங்க, வெள்ளி ரதங்களில் வீதியுலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில் மேயர் ஆர்.பிரியா, கோயிலின் முதன்மை அறங்காவலரும் கல்வி செயலாண்மை தலைவருமான ஏ.பி.அசோக்குமார், கல்வி செயலாண்மை குழு அறங்காவலர்கள் கே.நந்தகுமார், ஏ.என்.சுரேஷ்குமார், செயலர் லட்சுமணசாமி உள்பட ஏராளமான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.