நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் 7 தெப்பகுளங்கள் ரூ.1.50 கோடி செலவில் சீரமைப்பு பணி நடக்க இருக்கிறது. சுசீந்திரம் தெப்பகுளம் ரூ.40 லட்சம் செலவில் சீரமைப்பதற்காக தண்ணீர் வெளியேற்றும் பணி நடக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரத்திப்பெற்ற கோயில்களில் சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் பெரிய தெப்பகுளம் உள்ளது. இந்த தெப்பகுளத்தையொட்டி சுற்றி கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.
கோயில் திருவிழாவின் போது, இந்த தெப்பகுளத்தில் தெப்பதிருவிழா மிகவும் விமர்சையாக நடக்கும். இந்த கோயில் தெப்பகுளத்தில் உள்ள படித்துறைகள் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. மேலும் தண்ணீர் வண்டல் மண் தேங்கியும் உள்ளது. இதனை சரிசெய்ய பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து சுசீந்திரம் தெப்பகுளத்தை தூர்வாரி சீரமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து குமரி மாவட்ட அறநிலைத்துறை சார்பில் ரூ.40 லட்சம் செலவில் பணி தொடங்க உள்ளது. இதற்காக தெப்பகுளத்தில் உள்ள தண்ணீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இது குறித்து அறநிலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் கோயில்கள் புனரமைப்பு பணிகள் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு பல்வேறு குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேக செய்யப்பட்டுள்ளது.
தற்போது குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் உள்ள குளங்களை சீரமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுசீந்திரம் தெப்பகுளம் ரூ.40 லட்சத்தில் சீரமைக்கப்படவுள்ளது. குளத்தின் மையபகுதியில் உள்ள மையமண்டபம், ஆராட்டு நடக்கும் குளத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஓட்டுகுளப்புரை சீரமைப்பு, படிகள் சீரமைக்கு என பல பணிகள் செய்யப்பட உள்ளது.
குளத்தில் வண்டல் மண் அதிகமாக இருந்தால் அதனை அகற்றப்படும். ஐயப்பன் கோயில் சீசன் வருகிற நவம்பர் மாதம் இடையில் தொடங்கும். இதனால் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவு சுசீந்திரம் கோயிலுக்கு வருவார்கள். சீசன் தொடங்குவதற்குள் இந்த குளம் சீரமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்ப முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இதனை போன்று கேரளபுரம் மகாதேவர்கோயில் குளம், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் தெப்பகுளம், கன்னியாகுமரியில் உள்ள இரண்டு தெப்பகுளம், பீமநகரி தெப்பகுளம், சுசீந்திரம் பாத்திரகுளம் ஆகிய குளங்கள் சீரமைக்கப்படவுள்ளது. மொத்தம் 7 குளங்கள் ரூ.1.50 கோடியில் நடக்க இருக்கிறது என்றார்.