Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குமரியில் தொடரும் மழை: ரப்பர் மரங்களில் அழுகல் நோய் அதிகரிப்பு: விவசாயிகள் கடும் அதிர்ச்சி

அருமனை: குமரி மாவட்டத்தில் ரப்பர் பால் வடிப்பு ஒரு முக்கிய தொழிலாக உள்ளது. இது ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகிறது. மேலும் மாவட்ட வருவாயை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குமரி மாவட்டத்தில் இருந்து உலகத்தரம் வாய்ந்த ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ரப்பர் மரங்களின் இலைகள் உதிரும். இதனால் பால் வடிப்பு தொழில் நிறுத்தப்படும். புதிய இலைகள் துளிர்த்த பிறகு, மார்ச் அல்லது ஏப்ரலில் தொழில் மீண்டும் தொடங்கும்.

தொடர்ந்து பெய்யும் மழை ரப்பர் பால் வடிப்பு தொழிலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுபோல கடும் வறட்சி மற்றும் அதிக வெயில் போன்ற பருவநிலை மாற்றங்கள்கூட, சில நேரங்களில் பால் வடிப்பதை தாமதப்படுத்துகிறது.  தற்போது மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், ரப்பர் பால் வடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பல தோட்டங்களில் பால் வடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து, வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

இது இப்படி இருக்க, ரப்பர் மரங்களை தாக்கும் நோய்களும் விவசாயிகளை கடுமையாக பாதித்து வருகிறது. இலை சுருட்டல் நோய், மரம் அழுகல் நோய் போன்றவற்றால் ரப்பர் தோட்டங்களில் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்படுகிறது. ரப்பர் மரம் அழுகினால், பின்னர் அது காய்ந்து பட்டுப்போகும். அதன்பிறகு அது பயன்படாது. இதுபோன்ற நோய் மழை நேரங்களில் அதிகம் ஏற்படுவது வழக்கம்.இந்நிலையில், அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் தற்போது ரப்பர் மரங்களில் அழுகல் நோய் அதிகரித்துள்ளது. தோட்டத்தில் உள்ள மரங்களின் பட்டைகளில் சிறிதாக ஏற்படும் வெடிப்பு மூலம் ரப்பர் பால் வீணாக வடிந்து வெளியேறும். பின்னர் இந்த ஓட்டை அதிகமாகி, மரம் செல்லரித்தது போன்று உதிர்ந்தும், காய்ந்தும், பூஞ்சை, காளான் போன்றவை தொற்றியும் பால் வடிக்க முடியாத நிலை ஏற்படும். இறுதியில் மரம் பட்டுப்போகும்.

தற்போது குமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், இந்த அழுகல் நோய் அதிகரித்து விவசாயிகளுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். எனவே அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு, விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேலும் இந்த நோயில் இருந்து மரங்களை காப்பாற்ற, வேளாண் அதிகாரிகள் மூலம் உரிய ஆலோசனைகள், மருந்துகள் வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.