Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குமரியில் 10 இடங்களில் விநாயகர் சிலை கரைப்பு: போலீஸ் பட்டியல் தயாரிப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வல பாதைகளில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன. இது தொடர்பான பட்டியல் தயாரிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. இந்த விழா வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். 30, 31ம்தேதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளன.

விநாயகர் சதுர்த்திக்கு, இன்னும் 10 நாட்களே உள்ளதால் சிலைகள் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இந்து முன்னணி சார்பில் கண்ணாட்டுவிளையில் சிலைகள் தயாரிக்கப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்துமகா சபா சார்பில் மேல சூரங்குடியில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கருட வாகன விநாயகர், மயில் வாகன விநாயகர், சிங்க வாகன விநாயகர், கற்பக விநாயகர், மாணிக்க விநாயகர், தாமரை விநாயகர் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு வருகின்றன.

இந்த முறை இந்து மகா சபா சார்பில், முழுக்க, முழுக்க களி மண்ணால் சுமார் அரை அடி உயரத்தில் விதை விநாயகர் தயாரிக்கிறார்கள். இந்த விதை விநாயகர் சிலைகளை பூந்தொட்டியில் தண்ணீர் ஊற்றி கரைத்தாலே மண்ணில் விதைகள் முளைத்து விடும். கத்திரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், மிளகாய் மற்றும் தானிய வகை விதைகள் கலந்து, களிமண்ணால் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. விதை விநாயகர் சிலையை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்.இதற்கிடையே சிலைகள் கரைக்க பல்வேறு வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம், காவல்துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு சிலைகள் வைத்த இடத்தில் தான் இந்த ஆண்டும் சிலைகள் வைக்கப்பட வேண்டும். புதிய இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி இல்லை.

மாவட்டத்தில் கன்னியாகுமரி கடற்கரை, சொத்தவிளை கடற்கரை, சின்னவிளை கடற்கரை, சங்குத்துறை கடற்கரை, பள்ளிக்கொண்டான் அணை, வெட்டுமடை கடற்கரை, மிடாலம் கடற்கரை, தேங்காய்பட்டணம் கடற்கரை, திற்பரப்பு அருவி, தாமிரபரணி ஆறு போன்ற 10 இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிலைகள் ஊர்வலம் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடம் வழியாக தான் செல்ல வேண்டும். ஊர்வலம் புறப்படும் இடத்துக்கு நண்பகல் 12 மணிக்கு முன் சிலைகள் கொண்டு வர வேண்டும். மாலை 6 மணிக்குள் அனைத்து சிலைகளும் கரைக்கப்பட வேண்டும். பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தாத வகையில் குறிப்பிட்ட டெசிபல் அளவிற்குட்பட்ட பாக்ஸ் வடிவ ஒலிபெருக்கிகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. சிலைகள் வைக்கப்படும் இடங்களை ஏற்கனவே போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.

ஊர்வலம் செல்லும் பாதைகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன. தற்ேபாது ஊர்வல பாதைகளில் எங்கெங்கு கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. எந்த இடத்தில் கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி போலீசார் பட்டியல் தயாரித்து வருகிறார்கள். சிலை வைக்க அனுமதி கேட்பவர்கள் பாதுகாப்பு கமிட்டியில் உள்ள உறுப்பினர்களின் பெயர், செல்போன் எண்களையும் வழங்க வேண்டும். 24 மணி நேரமும் சிலைகள் உள்ள இடத்தில் பாதுகாப்பு கமிட்டி சார்பில், உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் சிலைகள் கொண்டு வரப்படும் வாகனத்தின் ஆவணங்களையும் முறையாக வைத்திருக்க வேண்டும் என போலீசார் கூறி உள்ளனர். குமரி மாவட்டத்தில் 30, 31ம் தேதிகளில் சிலை கரைப்பு பாதுகாப்பு பணியில் வெளி மாவட்ட போலீசாரும் ஈடுபட உள்ளனர்.