Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

குமரி மேற்கு கடற்கரையில் நாளை நள்ளிரவு முதல் விசைப்படகுகளுக்கு தடை நீங்குகிறது

*ஐஸ் நிரப்பும் பணிகள் தீவிரம்

குளச்சல் : மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு ஒன்றிய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைகாலம் 2 பருவ காலமாக உள்ளது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதிவரையும், மேற்கு கடற்கரை பகுதிகளான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. விசைப்படகு ஆழ்கடல் பகுதிக்கு சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும். இதற்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை விசைப்படகில் எடுத்து செல்வர். இந்த வருடம் குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் தடைக்காலம் ஜூன் 1ம் தேதி முதல் துவங்கியது.

இந்த மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்ப்பது வழக்கம். மேலும் வலைகள், மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்து கொள்வர். இந்த மீன்பிடி தடைக்காலம் துவங்கியதை முன்னிட்டு விசைப்படகுகள் குளச்சல், முட்டம், தேங்காப்பட்டணம் ஆகிய மீன் பிடித்துறைமுகங்களில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.

குறைவான தூரம் சென்று மீன் பிடிக்கும் பைபர் வள்ளம், கட்டுமரங்கள் வழக்கம் போல் மீன்பிடித்து வருகின்றன. இவை குறைவான தூரம் சென்று மீன்பிடித்து உடனே கரை திரும்புவதால் வருடத்தின் அனைத்து நாட்களிலும் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகிறது.

விசைப்படகுகளுக்கு இந்த தடைக்காலம் நாளை (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் நீங்குகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் விசைப்படகுகள் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும். தடை நீங்க 2 நாட்களே உள்ள நிலையில் விசைப்படகினர் படகுகளில் பராமரிப்பு பணிகளை முடித்து நேற்று முதல் விசைப்படகுகளில் ஐஸ் நிரப்பும் மற்றும் குடிநீர் ஏற்றும் பணிகளை தொடங்கி உள்ளனர். ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் மேற்கு கடற்கரை கிராமங்களில் விசைப்படகு மூலம் மீன் பிடித்தொழில் மீண்டும் களைக்கட்ட துவங்கும். மீண்டும் மீன் பிடித்தொழிலில் ஈடுபட ஊருக்கு சென்ற வடநாட்டு தொழிலாளர்கள் குமரி திரும்புகின்றனர்.