*சுங்கான் ஓடை, இரப்பை ஆறு கால்வாய் தூர்வாரப்படுமா?
ஆரல்வாய்மொழி : குமரி மாவட்டத்தில் தற்போது அணைகள் நிரம்பி மறுகால் பாயும் நிலையில் பொய்கை அணை மட்டும் நிரம்பாத நிலையில் உள்ளது. அணைக்கு தண்ணீர் வரும் சுங்கான் ஓடை , இரப்பை ஆறு கால்வாய் தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி- செண்பகராமன்புதூர் சாலையில் மரப்பாலம் பகுதியில் இருந்து சமத்துவபுரம் செல்கின்ற சாலையின் முடிவில் வடக்கு மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பொய்கை அணை அமைந்துள்ளது.
இந்த அணை 1202 மீட்டர் நீளமும் 44 .65 அடி நீர்மட்டமும் கொண்டதாகும். பொய்கை அணை கடந்த 1992 ம் ஆண்டு கட்ட தொடங்கப்பட்டது. அணை கட்டி பணிகள் முடிவுற்ற நிலையிலும் பல ஆண்டுகளாக அணை நிரம்பாமல் இருந்தது.
ஆய்வு செய்தபோது, அணைக்கு தண்ணீர் வரும் இரப்பை ஆறு கால்வாய் மற்றும் சுங்கான் ஓடையில் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டும், புதர்கள் நிரம்பியும் இருந்தது தெரியவந்தது.இதனால் அணைக்கு வரும் தண்ணீர் பல பகுதிகளுக்கு பிரிந்து சென்றது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இரப்பை ஆறு கால்வாய் மற்றும் சுங்கான் ஓடை தூர்வாரவும், உடைப்புனை சரி செய்யவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஓடைகளும் சரி செய்யப்பட்டது. அந்த ஆண்டு முதல் முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியதுடன் மறுகால் பாய்ந்தது.
பொய்கை அணையில் இருந்து தண்ணீர் வெளி மேலும் 2 கால்வாய்களில் மேட்டுக் கால்வாய் மூலம் அன்னூத்திகுளம், லட்சுமி புதுக்குளம், ஆத்திகுளம் ,மற்றும் திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கிராமத்திறகு உட்பட்ட பழவூர் பெரியகுளம், மேலப்பாலார் குளம், கீழ பாலார் குளம், சாலை புதுக்குளம், தெற்கு சிவகங்கை குளம் ஆகிய குளங்கள் தண்ணீர் பெறுகிறது.
இதன் மூலம் விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். இதுபோன்று ஆற்று மடை வழியாக கரும்பாட்டுகுளம்,கிருஷ்ணகுளம், செண்பகராமன்புதூர் பெரியகுளம், தோவாளை பெரியகுளம், பொய்கை குளம், குட்டி குளம், ஆரல்வாய்மொழி பெரியகுளம், வைகை குளம் ஆகிய குளங்கள் தண்ணீர் பெறுகின்றன.
தற்போது குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து முக்கிய அணைகள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகின்ற நிலையில் பொய்கை அணை மட்டும் நிரம்பாத நிலை ஏற்பட்டுள்ளது.
அணைக்கு வருகின்ற இரப்பை ஆறு கால்வாய் மற்றும் சுங்கான் ஓடை புதர்கள் நிரம்பி ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு அணைக்கு வருகின்ற தண்ணீர் நேரடியாக அணைக்கு வராமல் பல பகுதிக்கு பிரிந்து செல்கிறது.
இதனால் அணையின் நீர்மட்டம் மிக குறைவாகவே காணப்பட்டு வருகிறது. இதனால் இந்த அணையை நம்பியுள்ள விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் குறைய தொடங்கியுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பொய்கை அணைக்கு வரும் இரப்பை ஆறு கால்வாய் மற்றும் சுங்கான் ஓடைகளை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
