*குழாய் பதிக்க அனுமதி வழங்காததால் அவதி
குமாரபாளையம் : கத்தேரி பிரிவு சாலையில் குடியிருப்புகளின் கழிவுநீர் வழிந்தோடுகிறது. சாலையின் குறுக்கே கால்வாய் வெட்டி வெளியேற்றுவதற்கான அனுமதி கொடுப்பதில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குமாரபாளையம் நாற்கர சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையிலிருந்து கத்தேரி கிராமத்திற்கு செல்லும் பிரிவில், அப்பகுதியிலிருந்து வெளியாகும் கழிவுநீர் சாலையின் குறுக்கே வெளியேறுகிறது. இந்த கழிவுநீர் சாலையில் செல்வதை தடுக்க, சிறிய குழி வெட்டி தேக்கியுள்ளனர்.
ஆனால் தற்போதைய மழையால் குழிநிரம்பி கழிவுகள் சாலையை கடக்கிறது. இந்த சாலை வழியாக வந்து செல்லும் வாகனங்கள் கழிவுநீரை கடந்துதான் செல்ல வேண்டும். அதேபோல், நடந்து செல்வோரும் கழிவை மிதித்துத்தான் செல்ல வேண்டும்.
இதுகுறித்து தட்டாங்குட்டை கால்வாய் பாசன சங்க நிர்வாகி ரவி கூறுகையில், ‘சாலையின் குறுக்கே சிறுபாலமோ, அல்லது தற்காலிக குழாய்களோ பதிக்க, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும்.
ஆனால் அவர்களிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுகளில் கால்களை நனைத்தபடி தான் கத்தேரி கிராமத்திற்குள் செல்ல வேண்டும். எனவே, அதிகாரிகள் தலையிட்டு இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,’ என்றார்.


