மும்பை: ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் குல்தீப் யாதவ் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். ஆசிய கோப்பையில் சிறப்பாக பந்துவீசி வரும் குல்தீப் யாதவ் நடப்பு தொடரில் மட்டும் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்த நிலையில் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில், ஜாம்பவான்களான முரளிதரன், ஜடேஜா ஆகியோரை குல்தீப் பின்னுக்கு தள்ளி 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
இந்த போட்டிக்கு முன்பு சகிபுல் ஹசன் உடன் 28 விக்கெட்டுகள் வீழ்த்தி சமனில் இருந்த குல்தீப், நேற்றைய போட்டியில் 3 விக்கெட் கைப்பற்றிய நிலையில் தற்போது 29 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா மற்றும் 30 விக்கெட் வீழ்த்திய முரளிதரனை பின்னுக்கு தள்ளி 31 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்த பட்டியலில் 33 விக்கெட்களுடன் மலிங்கா முதலிடத்தில் உள்ளார். ஏற்கனவே பைனலுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ள நிலையில், இலங்கைக்கு எதிராக சூப்பர் 4 ஆட்டமும் எஞ்சி இருப்பதால் மலிங்காவை பின்னுக்கு தள்ளி நடப்பு ஆசிய கோப்பை தொடரிலேயே குல்தீப் முதலிடத்தை பிடிப்பார் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.