Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்: அக்.2ம் தேதி மகிஷா சூரசம்ஹாரம்

தூத்துக்குடி: பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா நாளை (23ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் அக்டோபர் 2ம் தேதி நள்ளிரவு மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மைசூருக்கு அடுத்து பிரசித்தி பெற்றாகும். இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (23ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நேற்று மகாளய அமாவாசை என்பதால் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து மாலை அணிந்து விரதம் துவங்கினர்.

நாளை (23ம் தேதி) அதிகாலை கொடி பட்டம் ஊர்வலத்தை தொடர்ந்து காலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. பின்னர் கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் பக்தர்கள் கோயில் பூசாரியிடம் திருக்காப்பு கட்டி தாங்கள் நேர்த்தி கடனுக்கான வேடங்கள் அணிந்து காணிக்கை பிரிக்க துவங்குவர். செப்டம்பர் 24ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை தினமும் காலை 7.30மணி, காலை 9மணி, காலை 10.30மணி, பகல் 12மணி, பகல் 1.30 மணி, மாலை 4.30 மணி, மாலை 6 மணி, இரவு 7.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 1ம் திருவிழாவான செப்டம்பர் 23ம் தேதி முதல் 9ம் திருவிழாவான அக்டோபர் 1ம் தேதி வரை தினமும் இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ஒவ்வொரு திருக்கோலத்தில் பல்வேறு வாகனத்தில் வீதியுலா நடக்கிறது.

6ம் திருவிழா முதல் 10ம் திருவிழா வரை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினர் வேடம் அணிந்து மேளம், டிரம்செட், தாரை தப்பட்டையுடன் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் வலம் வந்து காணிக்கை பிரிப்பார்கள். 10ம் திருவிழாவான அக்டோபர் 2ம் தேதி நள்ளிரவு மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 6 மணி, காலை 7.30 மணி, காலை 9 மணி, காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு 11 மணிக்கு அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையை தொடர்ந்து இரவு 12 மணிக்கு அன்னை சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

அக்டோபர் 3ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கடற்கரையில் அன்னைக்கு அபிஷேக ஆராதனையும், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோயில் முன்பு எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனையும், காலை 3 மணிக்கு அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து தேரில் பவனி வந்து தேர் நிலையம் வந்தடைதல் நடக்கிறது. பின்னர் அதிகாலை 5 மணிக்கு கோயில் கலையரங்கத்தில் அபிஷேக ஆராதனையும், காலை 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா புறப்படுதல், பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு சப்பரம் கோயிலுக்கு வந்து சேர்ந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதம் முறிப்பார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.