உடன்குடி: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நள்ளிரவு சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த செப்டம்பர் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினர் வேடம் அணிந்து கலைநிகழ்ச்சி நடத்தி காணிக்கை வசூலித்தனர். சிகர நிகழ்ச்சியான முத்தாரம்மன் மகிஷா சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் (2ம் தேதி) நள்ளிரவு நடந்தது. இதற்காக கோயிலிலிருந்து பூஜிக்கப்பட்ட சூலாயுதம் எடுத்து வரப்பட்டு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
பின்னர் சூரன் முன்னே செல்ல முத்தாரம்மன் சிதம்பரேஸ்வரர் கோயில் கடற்கரை அருகே எழுந்தருளினார். நள்ளிரவில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் முதலில் தன் தலையுடன் மோதிய சூரனையும், பின்னர் சிங்க உருவம் பெற்று வந்த சூரனையும், தொடர்ந்து எருமை தலை உருவம் பெற்று வந்த மகிஷாசூரனை தனது சூலாயுதத்தாலும் அம்மன் அழித்தாள். இறுதியாக சேவல் வடிவத்தில் வந்தபோது அதனையும் அழித்தாள். அப்போது பக்தர்கள் ஓம் காளி, ஜெய் காளி, தாயே முத்தாரம்மா என கோஷம் எழுப்பினர். நேற்று (3ம் தேதி) மாலை 4.30 மணிக்கு சப்பரம் கோயில் வந்து சேர்ந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதம் முறித்தனர். 12ம் நாள் திருவிழாவான இன்று (4ம் தேதி) மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடக்கிறது.
* தசராவுக்கு வந்த 2 மாணவர்கள் பலி
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா ஆவுடையார்புரத்தை சேர்ந்த ராமசாமி மகன் குருமூர்த்தி (21), கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இதே பகுதி முத்து மகன் ரஜித் (15), 9ம் வகுப்பு படித்து வருகிறார். பிரகாஷ் மகன் பாரதி (17), வடக்கன்குளத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நண்பர்களான மூவரும் பைக்கில் குலசை தசரா திருவிழாவிற்கு வந்தனர். நள்ளிரவு மகிஷாசூரசம்காரம், தசரா குழுக்களின் ஆட்டம் பாட்டங்களை கண்டுகளித்த மூவரும் பைக்கில் திரும்பியுள்ளனர். பைக்கை குருமூர்த்தி ஓட்டியுள்ளார். மணப்பாடு பகுதியில் வளைவில் வரும்போது எதிரே வந்த அரசு பஸ் மீது பைக் நேருக்குநேர் மோதியதில், குருமூர்த்தி, ரஜித் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். தலையில் பலத்த காயமடைந்த பாரதி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.