உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த செப்.23ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழாவில் தினமும் காலை 7.30 மணி, காலை 9மணி, 10.30மணி, பகல் 12 மணி, பகல் 1.30மணி, மாலை 4.30 மணி, மாலை 6 மணி, இரவு 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது.
10ம் நாள் திருவிழாவான நாளை (2ம் தேதி) நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரை சிதம்பரேசுவரர் கோயிலுக்கு முன்பாக சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் அன்னை முத்தாரம்மன், மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். தொடர்ந்து மறுநாள் அதிகாலை 1 மணிக்கு கடற்கரையில் அன்னைக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது.
பின்னர் 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோயில் முன்பு எழுந்தருளும் அன்னைக்கு சாந்தாபிஷேக ஆராதனையும், 3 மணிக்கு அபிஷேக மேடையில் சிறப்பு ஆராதனையும், காலை 6 மணிக்கு முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதி உலா வருதலும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு சப்பரம் கோயிலுக்கு வந்ததும் பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை முடிப்பார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. தசரா திருவிழாவின் கடைசி நாட்களில் குலசேகரன்பட்டினம் ஊருக்குள் வருவதே பெரிய சவாலாக இருக்கும் என கருதி பக்தர்கள் நேற்று காலை முதலே குவிந்து வருகின்றனர்.