Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

*திருச்செந்தூர் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

திருச்செந்தூர் : குலசை தசரா திருவிழா பாதுகாப்பு பணியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்துவதோடு 200 சிறப்பு பஸ்களை இயக்குவது என திருச்செந்தூரில் கோட்டாட்சியர் கவுதம் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

உலக அளவில் பிரசித்திபெற்ற குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (செப். 23ம் தேதி) செவ்வாய்க்கிழமை துவங்குகிறது.

விழாவின் சிகரமான மகிசா சூரசம்ஹாரம் அக். 2ம் தேதி இரவு நடக்கிறது. தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பான அரசு துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கவுதம் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார், தாசில்தார் பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கரன், குலசை கோயில் செயல் அலுவலர் வள்ளிநாயகம் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பக்தர்கள் வசதிக்காக திருக்கோயில் வளாகம், கடற்கரை மற்றும் புறவழிச்சாலை உள்ளிட்ட 25 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பந்தல்கள் அமைப்பது. 280 தற்காலிக மற்றும் நிரந்தர கழிப்பிடங்கள் அமைப்பது. தற்காலிக பஸ் நிறுத்தம் மற்றும் 6 இடங்களில் வாகன நிறுத்தங்கள் அமைப்பது.

பக்தர்கள் தரிசனத்துக்கு கூடுதல் வரிசைப்பாதை அமைத்து 64 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் புறக்காவல்நிலையத்தில் இருந்தவாறு கண்காணிக்கும் வசதியை ஏற்படுத்துவது. திருவிழா நாட்களில் 24 மணி நேரம் மருத்துவ வசதிகளுடன் கூடிய சுகாதார நிலையத்தை அமைத்து செயல்படுத்துவது.

கடற்கரையில் தயார் நிலையில் தீயணைப்பு வாகனம், 5 இடங்களில் பிஎஸ்என்எல் அலைவரிசை கோபுரங்கள், கடற்கரையில் 4 உயர்நிலை மின் விளக்கு கோபுரம், கடலோர பாதுகாப்பு பணியில் பைபர் படகுகள் 2 நீச்சல் வீரர்களை ஈடுபடுத்துவது. திருக்கோயில் சார்பில் பக்தர்களுக்கு இலவசமாக திருக்காப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

அத்துடன் தசரா கொடியேற்ற நாளில் 1000 போலீசாரும், முக்கிய தினங்களான அக். 1 மற்றும் 2ம் தேதிகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது. மேலும் தசரா திருவிழாவையொட்டி முக்கிய நாட்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நிகழ்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ரகுபதி, வட்டார மருத்துவ அலுவலர் ஷைன்லி, அரசுப் போக்குவரத்துக் கழக துணை மேலாளர்கள் வேலுதாஸ், மாரியப்பன், திருச்செந்தூர் கிளை மேலாளர் ராஜசேகர், குலசேகரன்பட்டினம் விஏஓ முத்துசங்கர், வருவாய் ஆய்வாளர் முனீஸ்வரி, தீயணைப்பு நிலைய அலுவலர் பாபநாசம், மின்வாரிய உதவிப் பொறியாளர் மகாலிங்கம், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் ராம்குமார், உடன்குடி பிடிஓ பாலசுப்பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் பரமசிவன் உணவு பாதுகாப்பு அலுவலர் திவ்யா, மீன்வளத்துறை எஸ்ஐ ராமகிருஷ்ணன், பிஎஸ்என்எல் இளநிலை அலுவலர் பீட்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.